பட்ஜெட்டுக்குள் வீடு கட்டுவது எப்படி?

பட்ஜெட்டுக்குள் வீடு கட்டுவது எப்படி?

வீட்டைக் கட்டுவதற்குமுன் அதற்கான வரவுசெலவு திட்டத்தை முடிவுசெய்வதுதான் முக்கியமான வேலை. அப்படிமுடிவுசெய்வதால், வீடு கட்டும்போது ஏற்படும் நிதி நெருக்கடியைத் தடுக்கலாம். அத்துடன், பட்ஜெட்டை முன்பே தீர்மானித்துவிட்டால் தேவையில்லாத விஷயங்களுக்குச் செய்யப்படும் செலவுகளும் குறையும். வீட்டின் வடிவமைப்பு, கட்டமைப்பில் சில முன்னேற்பாடுகள், சீரான கட்டமைப்பு செயல்முறை போன்ற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலே திட்டமிட்ட பட்ஜெட்டில் வீட்டைக் கட்டிமுடித்துவிடலாம். பட்ஜெட்க்குள் வீட்டைக் கட்டிமுடிப்பதற்கான சில ஆலோசனைகள்…

பட்ஜெட் அமைத்தல்

புதிதாக ஒரு வீட்டைக் கட்டும்போது ஏற்படும் அனைத்து தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து இந்த பட்ஜெட்டை அமைக்க வேண்டும். அதிலும் கட்டாயமாகத் தேவைப்படும் விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நிலத்தை வாங்கியவுடன், கட்டிட ஒப்புதலுக்கான செலவு, கட்டிடக் கலைஞரின் கட்டணம், கட்டிடத் தொழிலாளர்களின் கட்டணம் போன்றவற்றை வீட்டின் சதுரஅடிக்கு ஏற்பத் திட்டமிடுங்கள். மணல் சோதனை, தரப்படுத்துதல், செப்பனிடுதல் போன்றவையும் இந்தச் செலவில் அடங்கவேண்டும்.

ஒரு வீட்டின் பட்ஜெட் என்பது அந்த வீட்டின் வடிமைப்பைப் பொருத்துதான் அமையும். அதனால், இந்த அம்சத்தை முதலில் முடிவுசெய்ய வேண்டும். வளைவுகளுடன்கூடிய அறைகளை வடிவமைக்கும்போது அதற்கான கட்டுமானச் செலவும் தொழிலாளர் செலவும் அதிகரிக்கும். கூடுமானவரை எளிமையான வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பது வீட்டின் கட்டுமான செலவைக் குறைக்கும். அத்துடன், பயன்பாட்டுக்குரிய அறைகளை மட்டும் அமைப்பதும், அவற்றைச் சரியாக இணைப்பதும் நல்லது.

இப்போது, வீட்டின் கட்டுமானச் செலவைக் குறைக்க நினைக்கும் பலரும் திறந்தவெளி வீட்டுத் திட்டத்தைப் (Open-Plan home) பயன்படுத்துகிறார்கள். இந்தத் திட்டத்தில் வீடு கட்டுவதால் சுவர்கள், பகுப்பான்கள் போன்றவற்றின் தேவையிருக்கும். அத்துடன் கட்டுமான நேரம் குறைவதுடன், விளக்குகள், இறுதிக்கட்ட கட்டுமானம் போன்ற செலவுகளும் கணிசமாகப் குறையும்.

அலங்காரமான வடிவமைப்பு எப்போதும் செலவை அதிகரிக்கும். அதனால் அலங்கார வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, வடிவமைப்பாளரின் ஆலோசனைசெய்து, உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கும் வடிவைமைப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த வடிவமைப்புச் செலவுக்குள் ‘ஹார்டுவேர்’, மற்ற வடிவமைப்பு பொருட்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.

வீட்டின் உட்புற அலங்காரத்துக்கான செலவில் இறுதிக்கட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால் அதற்கேற்ப அந்தச் செலவைத் திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் எதிர்பாராத செலவுகளுக்காக ஒரு தொகையை ஒதுக்கிவையுங்கள். கட்டமைப்பு செலவுளை ஒன்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த நபர்களிடம் கேட்டு ஒப்பிட்டுப்பார்த்தபின் முடிவுசெய்துகொள்ளுங்கள்.

பொருட்களின் தேர்வு

கட்டுமானச் செலவைத் தீர்மானிப்பதில் கட்டுமானப் பொருட்களுக்கு முக்கிய இடமிருக்கிறது. சில கட்டுமானப் பொருட்களைக் குறைப்பதனால் செலவைப் பெரிய அளவில் குறைக்கமுடியும். அத்துடன், பன்முகத்தன்மைவாய்ந்த பொருட்களைப் பயன்படுத்தும்போது தொழிலாளர்களின் தேவையும் அதிகரிக்கும். அதுவும் செலவை அதிகரிக்கும். உதாரணத்துக்கு, மர தரத்தளத்தை அமைப்பதற்கான செலவு டைல்ஸ் தரத்ததளத்தை அமைப்பதற்கான செலவைவிடப் பன்மடங்கு அதிகம். அதே மாதிரி, உலோக பேனல்களை அமைப்பதற்கான செலவும் அதிகம்.

அதனால், மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களான ஃப்ளை-ஆஷ் கற்கள், மறுசுழற்சி செய்த ஸ்டீல், சிமெண்ட் கலப்பு பலகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். உங்களுடைய பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது செலவைக் குறைக்கும். அதற்காக, செலவைக் குறைக்க வேண்டுமென்று பொருட்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்வது நாளடைவில் கட்டுமானத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். சரியான பொருட்களைச் சரியான தரத்தில் தேர்ந்தெடுப்பது நீண்டகால செலவுகளைக் குறைக்கும்.

ஆற்றல் திறன் வாய்ந்த வீடு

ஆற்றல்-திறனுடன் கூடிய பொருட்களுடன் வீட்டைக் கட்டமைப்பது வருங்காலத்தில் செலவுகளைக் குறைக்க உதவும்.வீட்டின் ஆற்றல் திறன் வாய்ந்த மின்சாதனங்கள், சூரிய ஆற்றல், மாடித்தோட்டம் போன்றவற்றை வீட்டைக் கட்டும்போதே திட்டமிட்டுவிட்டால் மின்கட்டணச் செலவைக் கணிசமாக் குறைத்துவிடலாம். வீட்டைக் குளுமைப்படுத்தும் அம்சங்களை வீட்டின் சுவர்களிலும் மேற்கூரையிலும் கட்டும்போதே அமைத்துவிடுவது நல்லது.

இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி வீட்டை வடிவமைப்பதும் பல நன்மைகளைக் கொடுக்கும். வீட்டைக் கட்ட ஆரம்பத்தவுடன் கட்டமைப்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும். உங்களுக்குத் தேவையான கட்டுமானத்தைக் கேட்டுபெறுவது உங்களுடைய உரிமை. அதனால், தரம்குறைந்த கட்டுமானப் பொருட்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தினசரி கட்டுமானப் பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடுவதும் அவசியம். வீடு நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்குமுன்பே வடிவமைப்பாளரை அணுகிவிடுவது நல்லது. இதனால் கட்டுமானத்தை உரிய நேரத்தில் முடிக்கலாம்.

Leave a Reply