பட்ஜெட் அறிவிப்பால் அதிகரிக்குமா சிமெண்ட் தேவை?
கடந்த ஆண்டின் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்ட பின்னர் கட்டுமானத் துறை பெரிய அளவில் சரிவைச் சந்தித்தது. இதனால் பிரதானக் கட்டுமானப் பொருளான சிமெண்டின் தேவையும் பெருமளவில் குறைந்தது. இப்போது சிமெண்டின் தேவையானது பண மதிப்பு நீக்கக் காலத்துக்கு முந்தையை நிலையை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறது என்று கூறும் நிபுணர்கள், கடந்த ஆண்டில் இந்தியாவில் சிமெண்ட் தேவையின் வளர்ச்சியானது வெறும் 3 சதவீதம் என்னும் அளவுக்கே இருந்துள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் 2017-18-ம் ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கை கட்டுமானத் துறைக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது. அதில் ஊரக, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதனால் நாட்டில் கட்டுமானங்கள் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டெழ இந்த வாய்ப்பு கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டுமானத் துறையின் இந்த வளர்ச்சி காரணமாக நாடெங்கும் சிமெண்டின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அத்துறையில் நிலவிவருகிறது. ஏனெனில் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் புழக்கத்தில் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் இன்னும் அதிகமாக சிமெண்டே பிரதானக் கட்டுமானப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது என்பதை மறுக்கவியலாது. கட்டுமானத் திட்டங்களின் வளர்ச்சியையும், அது செயல்படுத்தப்படும் விதத்தையும் பொறுத்து இந்த சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அத்துறையினரிடையே நிலவுகிறது. ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுமானத் திட்டங்கள் அமல்செய்யப்படும்போது, சிமெண்டின் தேவையானது அதிகரிக்கும் என்பது கண்கூடு.
பண மதிப்பு நீக்கத்தால் சிமெண்ட் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த வர்த்தகப் பாதிப்பானது நாடு முழுவதும் ஒரே அளவில் இருந்திருக்கவில்லை. நாட்டின் தெற்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் வர்த்தகப் பாதிப்பானது, வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் ஒப்பிடும்போது சற்றுக் குறைவே. சிமெண்ட் வர்த்தகத்தில் நேரடியான பணப் பரிமாற்றம் குறைந்தபோதும், பணமற்ற பரிமாற்றம் அதிகரித்திருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்தச் சூழலில் வீட்டு வசதித் துறைக்கும் உள்கட்டமைப்புக்கும் தேவையான முக்கியத்துவத்தை இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை தந்திருக்கிறது. ஆகவே, கட்டுமானங்கள் ஒரு பத்துப் பதினைந்து சதவீதம் அதிகரித்தாலே அதற்கேற்றாற்போல் சிமெண்டின் தேவையும் அதிகரிக்கும். உதாரணமாக சாலைகள், ரயில்வே திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், துறைமுகப் பகுதிகளின் கட்டுமானத் திட்டங்கள் போன்றவை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்படும்போது அவற்றுக்கான சிமெண்டின் தேவை அதிகரிக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
ஏற்கெனவே கடந்துசென்ற ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் ஊரகச் சாலைகள் திட்டங்களும் அமலாக்கப்படும்போது அவை சிமெண்டின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதை எளிதில் உணரலாம். அதே போல் சலுகை விலை வீடுகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதும் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம். இந்த அந்தஸ்து காரணமாக அதிகப்படியான சலுகை வீடுகள் உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி அதிகப்படியாக சலுகை விலை வீடுகள் உருவாக்கப்படும்போது அவற்றுக்கு ஏற்ற வகையில் சிமெண்டின் தேவையும் அதிகரிக்கும்.
சலுகை விலை வீடுகளை வாங்குவதற்கான கடன்களுக்குச் சில வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சலுகைகள், சலுகை விலை வீடுகளின் உருவாக்கத்துக்கு ஊக்கத்தைத் தரும் என்பதும் எளிதில் விளங்கக்கூடியது. இந்த வகை வீடுகளை உருவாக்கும் பல திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஊரக வளர்ச்சியை மேம்படுத்தத் தேவையான அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு அழுத்தம்கொடுக்கும்வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரிச் சலுகையின் வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் கட்டுமானத் துறையைக் கைதூக்கிவிடும் அம்சங்களாகவே உள்ளன.
இதனால் கட்டுமானத் திட்டங்கள் அதிகரிக்கும் சூழலும் அதன் காரணமாக சிமெண்டின் தேவை அதிகரிக்கும் என்பதையும் அத்துறையினர் வலியுறுத்திச் சொல்கிறார்கள்.
சிமெண்ட் விலையைப் பொறுத்தவரையில் நாட்டின் தென்பகுதிகளில் அதிகமாகவும் அதேசமயம் தங்க விலை போன்று ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது என்று சொல்கிறார்கள் கட்டுமானத் துறையினர். நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும் சிமெண்ட்டின் விலை மிகவும் பலவீனமான நிலையிலேயே இந்த நிதியாண்டில் இருந்திருக்கிறது என்கிறார்கள் அவர்கள். இந்தப் பகுதிகளில் சிமெண்டின் தேவை எந்த வித வளர்ச்சியையும் காணாமல் அப்படியே இருந்திருக்கிறது என்பதாலேயே அதன் விலையும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ஆகவே நிதிநிலை அறிக்கையின் ஊக்கத்தால் சிமெண்ட்டின் தேவை அதிகரிக்கும்போது சிமெண்ட்டின் விலையும் முறைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்படுகிறது.