பட்டா தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
வீட்டுக்கு, நிலத்துக்கு முன்பெல்லாம் பதிவுப் பத்திரம் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது பட்டாவும் அவசியமான ஆவணம் ஆகிவிட்டது. அதனால் பத்திரத்தைப் பத்திரப்படுத்துவதுடன் பட்டாவையும் பத்திரப்படுத்த வேண்டும். பத்திரப்படுத்தியும் பட்டா காணாமல் போனால் வீட்டுக்குப் பத்திரம் இருக்கிறதே, போதும் என இருந்துவிட முடியாது. பட்டாவும் அவசியம். ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டாவின் தேவை இருக்கிறது.
சரி, பட்டா காணாமல் போய்விட்டால் என்ன செய்வது? பட்டாவுக்குப் பதில் மீண்டும் விண்ணப்பித்து பட்டா வாங்கிவிட முடியும். முதலில் பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். அங்கே விண்ணப்பிக்க வேண்டும். பட்டா கோரும் விண்ணப்பத்துடன் நமது தொலைந்த பட்டாவின் நகலை இணைத்துக் கொடுப்பது அனுகூலமானது இல்லை. நகல் இல்லையென்றால் அந்தப் பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைக் கொடுக்கலாம். பட்டாவுக்காகக் குறிப்பிட்ட தொகையை, வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். பட்டாவைப் பெற சில நடைமுறைகள் உள்ளன. தாசில்தாரிடம் பட்டா கேட்டு மனு தந்த பிறகு, கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் விசாரணைக்குப் பிறகு மனு மீது ஒப்புதல் பெற வேண்டும். விசாரணையின் அடிப்படையில் பட்டா கிடைக்கும். பட்டாவைப் பெற அதிகபட்சமாக 15 நாட்கள் கால அவகாசம் உண்டு.