பணக்காரர்கள் வங்கிகளுக்கு ஏன் போகவில்லை?

பணக்காரர்கள் வங்கிகளுக்கு ஏன் போகவில்லை?

1இனிப்போ, கசப்போ அதன் பெயர் மருந்து. அதையும் அருந்தச் சொல்வது அரசன் என்கிறபோது மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பழைய ஆயிரமும், ஐநூறும் செல்லாது என்ற ‘அரச’ அறிவிப்புக்கு இதுதான் இப்போதைய சமாதானமாக இருக்க முடியும். ஆனால், ஒட்டுமொத்த மக்களும் இந்த மருந்தை ஒன்றே போல்தான் சுவைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் நவம்பர் 9-ம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து இதை எழுதுகிற நிமிடம்வரை வங்கிகளின் வாசலில் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர். அனைவரின் கைகளிலும் 5 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரையில், அவ்வளவும் பழைய ரூபாய் நோட்டுகள்.

நபர் ஒருவர் ரூ.4 ஆயிரம் வரையில்தான் வங்கிகளில் பணத்தை எடுக்க அனுமதி என்பதால் ஆதார் அட்டை உள்ளிட்ட போட்டோ அடையாள அட்டைகளைக் காட்டினால் 2 முழு ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வங்கிகளில் கொடுக்கிறார்கள்.
அதற்குக் குறைவான சில்லறைகளை பல இடங்களில் தருவது இல்லை. நூறு, ஐநூறு, ஆயிரங்களாக வாடிக்கையாளர் கேட்டால் வங்கிகளுக்கு இன்னும் கைவசம் போதுமான பணம் வந்து சேரவில்லை என்ற காரணத்தையும் சொல்கிறார்கள்.
வங்கிகளில் போடுவதென்றால் லட்சத்தில் ஆரம்பித்து கோடிகள் வரையில் போடலாம், அதற்குத் தடையில்லை.

வங்கிகளில், அரசு அறிமுகம் செய்துள்ள புதிய ரூபாய் நோட்டுகளை எடுப்பது, போடுவது, அடையாள அட்டையை கொடுப்பது போன்ற விஷயங்கள் எல்லாமே ஏழை மக்கள் சார்ந்த விஷயங்களாக மட்டும் இருக்கின்றன.

பணம் இருக்கிறவர்கள், வங்கிப் பக்கம் தென்படவே இல்லை. அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர்களோ, சினிமா நட்சத்திரங்களோ வங்கி வரிசையில் காணவில்லை. அவர்களிடம் இருக்கிற பணத்தை யார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இப்போது எழுந்துள்ளது.

சென்னையின் முக்கிய வணிகமையமாக திகழும் தியாகராயர் நகர், சௌகார்பேட்டை, புரசைவாக்கம், மண்ணடி, தாம்பரம் போன்ற இடங்களில் நேரடி விசிட் அடித்ததில் கிடைத்த தகவல்களைவிட, வங்கிகளில் நடக்கும் பரிவர்த்தனை உச்சகட்ட திகில்தான்.

சென்னை துறைமுகம், கோயம்பேடு, தி. நகர், மண்ணடி போன்ற இடங்களில் வணிகம், டிரான்ஸ்போர்ட், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பல தொழில்களைக் கையில் வைத்திருக்கும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிலர் வீட்டில் கூட்டம் அலைமோதுகிறது. சின்னச் சின்னத் தொழிலதிபர்கள், திரையுலக ஆட்கள் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல், கட்சி, தொழில் பாகுபாடின்றி, அவர்களின் வீடுகளில் முகாமிட்டுள்ளனர்.

பண மாற்றத்துக்கு முக்கிய மேலிடத்தை அணுகும் வி.ஐ.பி-க்களிடம், அதிகார மைய ஆட்கள், “இதில் நாங்கள் உதவமுடியாது, நாங்கள் சொல்லி அனுப்பியதாக நீங்களே போய்ப் பார்த்து விடுங்கள். நாங்கள் ஒரு லிஸ்ட்டைக் கொடுத்துள்ளோம். அதில் உங்கள் பெயரும் இருக்கிறது” என்கிறார்களாம்.

அடகுக்கடை, ஜவுளிக்கடை மொத்த விலைக் கடைகளை நிர்வகிக்கும் தொழிலதிபர்களும் வங்கிகளில் தொடர்புள்ள அரசியல் பின்புலம் கொண்ட பிரமுகர்களின் வீடுகளுக்குப் போய் வந்துகொண்டிருக்கிறார்கள். வாங்குகிற பணத்தில் மொத்தத்தில் 25 சதவிதம் கமிஷன் தொகையை அந்தப் பிரமுகர்கள் எடுத்துக்கொள்கின்றனர். (வங்கியில் கொண்டுபோய்க் கட்டினால் 70 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு 30 சதவிகிதம் மட்டுமே கொடுப்பார்களாம்). ஒரு கோடியைக் கொடுத்தால் மறுநாளே 75 லட்ச ரூபாயைக் கொடுத்துவிடுகிறார்கள். பணமும் கறுப்பு இமேஜிலிருந்து வெள்ளையாக மாறிவிடுகிறது.

மீடியேட்டராக செயல்படும் பிரமுகர்கள், அந்தப் பணத்தை வங்கியில் செலுத்துவதில்லை. அப்படிச் செய்தால், அது அவர்களுக்கே நஷ்டத்தைக் கொடுக்கும். நேரடியாகவே வங்கிகளில் தொடர்புள்ள மீடியேட்டர்கள் உதவியுடன் அந்தப் பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

நாளொன்றுக்கு நபர் ஒருவர் ரூ.4 ஆயிரம்தான் எடுக்க முடியும், என்பதால், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைச் சேகரித்து மொத்தமாக கையில் வைத்துக்கொண்டு ‘செய்வதை திருந்தச் செய்’ பாணியில் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

பல மாவட்டங்களில் ஆட்கள் இல்லை, முகவரி சரி இல்லை, முகவரி மாற்றம் என்று பல காரணங்களைச் சொல்லி குப்பையில் கொட்டப் பட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் இன்றைய தேதியில் இதற்குத்தான் பயன் பட்டிருக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, எல்லாமே மிகப் பெரிய திட்டத்தின் பின்னணியைக் கொண்டிருப்பது விளங்க வரும். அதிகாரமையத்தில் இருக்கும் பலர் நேரடியாக வங்கிகளைத் தொடர்புகொள்வதில்லை. வங்கிகளின் மீடியேட்டர்களை, தங்களுடைய உதவியாளர்கள் மூலமாக சந்திக்கவைத்து பணப் பரிமாற்றத்தை நடத்திவிடுகின்றனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமும் பழைய ஐந்நூறு, ஆயிரம் நோட்டுக்கள் மாற்றப்பட்டு பணப் பரிமாற்றம் பரவலாகி இருக்கிறது. நபர் ஒருவர் 2 லட்ச ரூபாய் வரையில் முதலீடு என்ற கணக்கில் பலர் முதலீடு செய்துள்ளனர். ஒரு குழுவில் 200 பேர் வரையில் இருக்கிறார்கள்.

சரியாக 20 நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப எடுத்து வந்து முதலீடு செய்ய கொடுத்தவரிடமே ஒப்படைத்துவிட வேண்டுமாம். இதற்கு கமிஷனாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஏராளமான ‘அறக்கட்டளை’கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறக் கட்டளையின் வாயிலாக 80-ஜி பதிவுச்சட்டப்படி நன்கொடைகள் வழங்குவது, பெறுவது என்று வேலைகள் ஜரூராகப் போய்க்கொண்டிருக்கின்றன.

புதிதாக நிறுவப்பட்ட கம்பெனிகள், ஏற்கெனவே இருந்து திவாலான கம்பெனிகள் ‘குரூப் ஆஃப் கம்பெனீஸ்’ என்ற அடிப்படையில் நூற்றுக் கணக்கில் கிளைகளைத் தொடங்கி அவற்றுக்கு அதே போன்று இயக்குநர்களைப் போட்டுள்ளனர்.

பெரும்பாலான கம்பெனிகளில் லாபத்தை குறைவாகக் காட்டியும், வேலை நடக்கிறது. நஷ்டத்தை அதிகமாகக் காட்டியும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி வருகின்றனர். இவர்களின் கம்பெனிகளில் ‘கறுப்புப்பண’ முதலைகள் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றனர்.

ஒருமாதம் கழித்து, புதிதாக ஆரம்பித்த குரூப் ஆஃப் கம்பெனீஸ் அதிபர்கள், தங்கள் கம்பெனியின் வாயிலாகவே 30 சதவிகிதக் கழிவுடன் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி மீண்டும் கறுப்பு முதலைகளின் கைகளுக்கேத் திருப்பி அனுப்பிவைப்பார்கள். அதே போல் ஊழியர்களின் சம்பளப் பணத்தையும் பன்மடங்கு கூடுதலாகக் காட்டி அனைத்தையும் ‘வெள்ளை’ ஆக்கிக்கொண்டுள்ளனர்.

லட்சக்கணக்கில் மட்டுமே தொகையைக் கையில் வைத்திருக்கும் நபர்கள், உள்ளூர் ஆட்களிடம், ‘ஆயிரம் ரூபாய்க்கு 300 ரூபாய் கமிஷன்’ கொடுப்பதாக உறுதி கொடுப்பதால், பரவலாகப் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு களுடன் வங்கிகளின் வாசலில் உள்ளூர் ஆட்கள் காத்துக் கிடக்கின்றனர். வங்கிகளில் கொடுத்தால் 70 சதவிகிதம் வருமான வரியே போய்விடும் என்ற நிலையில் 30 சதவிகிதம் நஷ்டத்தில் லாபம்தானே?

சென்னை மட்டுமல்லாது, பல மாவட்டங்களில் நடந்துகொண்டிருக்கும் பல்வேறு மோசமான பண பரிமாற்றம் குறித்த தகவலை தேசிய அளவிலான ‘இன்டலிஜென்ஸ்’ ஆட்கள், ரிப்போர்ட் போட்டு விட்டதன் தொடர்ச்சிதான், பல ஊர்களில் நகைக்கடைகளில் ரெய்டு நடந்ததன் பின்னணி.

Thanks  to vikatan.com

Leave a Reply