பணமதிப்பிழப்பின் ஆவி மீண்டும் அரசை முற்றுகையிட வந்துள்ளது – ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பின் ஆவி மீண்டும் அரசை முற்றுகையிட வந்துள்ளது – ப.சிதம்பரம்

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பணம் இல்லாமல் ஏராளமான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

பணத்தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் சீராகும் என பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏ.டி.எம்.மில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வருவது குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், பண மதிப்பிழப்பின் ஆவி மீண்டும் மத்திய அரசை முற்றுகையிட வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களால் வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். பண மதிப்பிழப்பின் ஆவி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியையும் முற்றுகையிட வந்துள்ளது.

பணமதிப்பிழப்பின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 17 மாதங்கள் ஆகியும் புது நோட்டுகளை ஏடிஎம்.மில் வைப்பதில் சிரமம் ஏற்படுவது ஏன்? ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி தவறாக கணக்கீடு செய்துவருகிறது.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பண முதலைகளுக்கு மட்டுமே பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. எனவே, பணத் தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து மத்திய அரசு மக்களிடம் விளக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்

Leave a Reply