பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதம், ஊழல் ஒழிந்துவிட்டதா? கனிமொழி கேள்வி
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த நிலையில் இன்றுடன் ஓராண்டு பூர்த்தி ஆகியுள்ளது. இந்த நாளை திமுக, கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘;பழைய ரூ.500, ரூ.1000 விவகாரத்தில் ஓராண்டாகியும் பொருளாதாரமும், மக்களும் மீளவில்லை. எனவே தான் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது
மத்திய அரசு கூறியது போல் கறுப்பு பணம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்டவை ஒழிந்துவிட்டதா? சாதாரண மக்கள் வங்கி வாசலில் நின்றபோது சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கில் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன’ என்று கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தோல்வி பயத்தால் தான் அதிமுக தேர்தலை நடத்தவில்லை’ என்று கூறினார்.