பத்திரம் பதியலாம்; வீடு கட்டலாம்

பத்திரம் பதியலாம்; வீடு கட்டலாம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொழிலைப் பொருத்தமட்டில் சில பத்தாண்டுகளுக்க் முன்பு வரை இருந்த வளர்ச்சி இப்போது இல்லை. ரியல் எஸ்டேட் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய அளவில் பங்காற்றக்கூடிய ஒரு துறை. தமிழகப் பொருளாதாரத்தைன் அதன் பங்கு முக்கியமானது. ஆனால் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு, அரசு வழிகாட்டும் மதிப்பு கூடியது எனப் பல அம்சங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலைக் கடுமையாகப் பாதித்தன.

இந்தியக் கட்டுமானச் சங்கமும் கிரடாய் அமைப்பும் சில ஆண்டுகளாகவே சிமெண்ட் விலை உயர்வுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். சிமெண்டை அத்தியாவசியப் பொருளாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதன் பெயரில் பெரும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் ரியல் எஸ்டேட் கடும் தேக்கத்தைக் கண்டது. இந்த நிலையில்தான் கடந்த ஜனவரியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு அங்கீகாரமற்ற வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவு செய்யத் தடை விதித்தது. இந்த உத்தரவால் ஏற்கனவே தேக்கமடைந்திருந்த கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.

பொதுவாக வீட்டு மனைகள் வாங்குவது நல்ல முதலீடாகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. ‘மண்ணில் போடு அல்லது பொன்னில் போடு’ என்று சொல்வதுண்டு. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மனை விற்பனை கிட்டதட்ட முற்றிலும் முடங்கிப் போயிருந்தது. பத்திரப்பதிவு அலுவலங்களுக்குப் பதிவுசெய்வதைத் தவிர்த்து வந்தன. இதனால் மனை வாங்குவது, விற்பது முடங்கிப் போயிருந்தது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதனிடையே சமீபத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவுசெய்ய விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 2016 அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்த வீட்டுமனையை மறு பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் வீட்டு மனை வாங்குவது மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த உத்தரவு குறித்து தேசியக் கட்டுமானச் சங்கத்தின் உறுப்பினரான ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ் “இதன் மூலம் வீட்டு மனைகள் பதிவுசெய்வது தொடங்கும். இப்போதே வாடிக்கையாளர்கள் கட்டுமானத் திட்டத்துக்காக அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார்.

ஒருவகையில் இது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால் தமிழகத்தில் விவசாய நிலங்களில் அங்கீகாரம் இல்லாத மனை லே-அவுட்களை உருவாக்கி விற்று நிலை கொஞ்சம் மாறியிருந்தது.

கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புகளிடம் அனுமதிபெற்று மனைகளை எளிதாக உருவாக்கிவிடுகிறார்கள். கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மனை லே-அவுட்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரமே கிடையாது எனச் சொல்லும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷ்யாம்சுந்தர், உரிமையாளர் அல்லது மற்றவர்கள் தெரு, சந்துகள் அல்லது வழிகள் அல்லது இரு வழிகள் அமைப்பது அல்லது எந்த ஒரு பகுதியிலும் கட்டுமானப் பயன்பாட்டுக்கான லே- அவுட்டுகளை நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடீசிபி) அங்கீகாரம் இல்லாமல் அமைக்க முடியாது என்று தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டிட விதிமுறைகள் 1997 விதிமுறை 3-ன் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.

இப்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கட்டுமானத் துறை வளர வழிவகை செய்யும். ஆனால் விளைநிலங்கள் மனைகளாக ஆவதைத் தடுக்க முறையான திட்டங்கள் வகுப்பட வேண்டும். “விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது கண்டிக்கத்தக்கது. இந்த தடை உத்தரவு காலகட்டத்திலும்கூடச் சில இடங்களில் பத்திரப் பதிவுசெய்யப்பட்டது. இது எப்படி நடக்கிறது? இங்கே சட்டங்கள் உருவாக்குவதைவிட அதை அரசாங்க அதிகாரிகள் கடைபிடிக்கிறார்களா, எனக் கண்காணிப்பதும் அவசியம்” என்கிறார் கிறிஸ்துராஜ். நமக்குக் கட்டுமானமும் தேவை அதே சமயம் விளைநிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதைக் காக்க அரசு சட்டம் இயற்றுவதும், அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதும் ஒரு பக்கம் இருந்தாலும் பொதுமக்களும் இதில் பங்காற்றி விளை நிலங்களை வீட்டு மனைகளாகப் பதிவுசெய்யமாட்டோம் என உறுதி எடுக்க வேண்டும்

Leave a Reply