பயணத்துக்கு ‘சுவை’ கூட்ட: முருங்கைக் கீரை பொடி சாதம்
என்னென்ன தேவை?
சாதம் – 1 கப்
முருங்கைக்கீரை, கறிவேப்பிலை – தலா ஒரு கப்
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
பாதாம்,முந்திரி, பிஸ்தா (வறுத்து துருவியது) – 2 டீஸ்பூன்
உப்பு , நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முருங்கைக் கீரை, கறிவேப்பிலை இரண்டையும் நன்றாக அலசி தனித்தனியாக நிழலில் ஒரு வாரம் காயவையுங்கள். வெறும் வாணலில் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் வறுத்துக்கொள்ளுங்கள். இதே போல் முருங்கைக் கீரை, கறிவேப்பிலை இரண்டையும் தனித் தனியாக லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பொடி ஆறு மாதம்வரை கெடாது. (இந்தப் பொடியை தோசை, இட்லி, சப்பாத்தி மாவில் கலந்தும் செய்யலாம். ஆம்லெட்டில் தூவியும் சாப்பிடலாம்). வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் சாதம், பொடி, உப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்துக் கிளறுங்கள். பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலைச் சேர்த்து இறக்கிவையுங்கள்.