பயணிகளின் தகவல்களை விற்க – இந்தியன் ரயில்வே முடிவு

சிறிது சிறிதாக, தனியாருக்கு தாரை வார்க்கப்படும் , இந்தியன் ரயில்வே இப்போது , அதிர்ச்சியளிக்கும் வகையில், பயணிகளின் தகவல்களை ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக, முன்பதிவு செய்து ரயில் பயணச்சீட்டை பெறுகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.

இப்போது பயணிகளின் தகவல்களை விற்பனை செய்வதற்கு , தனியார் நிறுவனங்களிடம் இந்தியன் ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் வகையில், தகவல்களை விற்பனை செய்யும் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, வங்கி, விருந்தோம்பல், காப்பீட்டுத் துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தத் தகவல்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவிக்கிறது.

பயணிகளின் தகவல்களை விற்பனை செய்வதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியது இந்தியன் ரயில்வேயின் கடமை.

மாறாக வாடிக்கையாளர்களின் தகவல்களை விற்பனை செய்வதால், பயணிகளின் தனிப்பட்ட அந்தரங்கம் பாதிக்கப்படும்.

உயிர் மற்றும் உடைமைக்கும் அச்சுறுத்தலை உருவாக்கும் . அவசர நிலையில் சிந்திக்காமல் தவறான முடிவை, இந்திய ரயில்வே எடுக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணம்.