பருவ மழை எதிர்பார்ப்பு… பக்கா லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்!

பருவ மழை எதிர்பார்ப்பு… பக்கா லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்!
share
பருவத்தில் பார்ப்பதெல்லாம் அழகாகத்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல் விவசாயத்தைப் பொறுத்தவரை பருவமழை தான் அழகு.

அதற்கு ஏற்றாற் போலவே தற்போது இந்தியாவின் பருவ மழை வழக்கத்தை விட கூடுதலாக பொழிய வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் வானிலை ஆய்வு மையத்துறை கணித்திருக்கிறது.

மழைப் பொழிவதோடு, இந்திய பங்குச் சந்தைகளும் பருவநிலையை காரணமாக வைத்து ஏறத் தொடங்கி இருக்கிறது.  உண்மையாகவே சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக பருவமழை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

பருவ மழையின் முக்கியத்துவம் :

இன்று வரை இந்தியர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை தான் பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். 16 கோடி ஹெக்டேர் நில பரப்பில் விவசாயம் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் வெறும் 3.5 கோடி ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் தான் நீர்பாசன வசதி செய்யப்பட்டு இருக்கின்றன. பாக்கியுள்ள 12.5 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக, விவசாயிகள் விவசாயம் செய்யத் தயாராக இருந்தாலும் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய நிலங்களாக இருக்கின்றன என்று அரசு வலைதளங்கள் சொல்கின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று :

இந்தியாவின் மொத்த மழை பொழிவிற்கும் இரண்டு பருவக் காற்றுகளே காரணம். அதில் தென்மேற்குப் பருவக் காற்று இந்தியாவை அடையும் போது இரண்டு பிரிவுகளாக பிரிகின்றன.

அதில் ஒரு பிரிவு அரபிக் கடல் வழியாக காற்றில் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம்,  குஜராத் ஆகிய மாநிலங்களில் மழை பொழிகிறது.
மற்றொரு தென்மேற்குப் பருவக்காற்று கிளை  வங்கக் கடல் வழியாக கடப்பதால் ஈரப்பதத்தை காற்றில் எடுத்துக் கொண்டு ஹிமாலய மலையால் தடுக்கப்பட்டு அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மழை பொழிகின்றன.

அதோடு இந்த தென்மேற்குப் பருவக் காற்று தான் இந்தியாவின் 70% மழையை தருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 89 சென்டிமீட்டர் மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு இதை விட சற்று கூடுதலாக மழை பொழியும் என்று கணித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஏறத் தொடங்கிய சந்தை :

கடந்த ஏப்ரல் 11, 2016 திங்கட்கிழமை அன்று காலை 7577 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கிய நிஃப்டி, 18 ஏப் 2016 அன்று 7914 என்கிற புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்த ஒரு வார காலத்தில் சுமாராக 4.2 சதவிகித சந்தை (337 புள்ளிகள்) கடகடவென உயர்ந்துவிட்டது. காரணம் பருவநிலை நன்றாக இருக்கிறது என்கிற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகள் தான்.

2002 முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் ஆண்டுக்கு பெய்த சராசரி மழை அளவை அட்டவணை 1ல் காணலாம்,

இந்தியா முழுவதுமான மழைப் பொழிவு (அட்டவணை 1) ஆதாரம் : IMD

மழைப் பொழிவும் சந்தையும் :

இந்தியாவில் 21ஆம் நூற்றாண்டில் 2002, 2004, 2009, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் மழைப் பொழிவு குறைவாகி வறட்சி நிலவிய காலங்களாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வறட்சி ஆண்டுகளைத் தவிர 2007 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நல்ல பருவமழை பொழிந்த போது சந்தை ஏற்றத்தை சந்தித்திருக்கிறது.

2002 முதல் 2015ஆம் ஆண்டு வரையான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஏப்ரல் 01 முதல் அக்டோபர் 01 வரை) சென்செக்ஸ் எவ்வளவு மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை அட்டவணை 2ல் காணலாம்.

 * – ஏப்ரல் 01 முதல் அக்டோபர் 01 வரையான சென்செக்ஸ் மாற்றம் கணக்கிடப்பட்டிருக்கிறது

சந்தை சொல்வது என்ன :

பருவமழை பொழிவு பற்றிய அறிவிப்புகளை விட சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள், உலக பொருளாதார காரணிகள் போன்ற காரணிகளால் சந்தை ஏற்றம் அல்லது இறக்கத்தை சந்தித்திருக்கிறது என்பதையும் கவனிக்கவும்.

உதாரணமாக 2014ஆம் ஆண்டு பருவமழை குறைவாக இருந்த போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலை மந்தமாக இருந்த போதிலும் ‘மோடி’ லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சந்தை 2014 பருவமழைக் காலத்தில் அதாவது ஏப்ரல்01 – அக்டோபர் 01 வரை 18 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது.  

2009ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றதை கண்டு காளை வர்த்தகர்கள் சென்செக்ஸை சுமார் 1500 புள்ளிகள் கேப் அப்பில் அந்த வர்த்தக நாளின் வர்த்தகத்தை தொடங்கினார்கள். அதோடு அந்த ஆண்டில் வறட்சி நிலவினாலும் 76.35 சதவிகிதம் (2009 ஏப்ரல் 01 – அக்டோபர் 01 வரை) சந்தை அதிகரித்தது. அந்த வருடம் பருவநிலையை ஒரு சென்டிமென்டாக கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை கவனிக்கவும். ஆக ஒட்டு மொத்தத்தில் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ளும் டிரேடர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் வலுவான வேறு செய்திகள் கிடைக்கவில்லை என்றால் தான் பருவநிலையை காரணம் காட்டி வர்த்தகத்தை மேற்கொள்கிறார்கள்.

இனி பருவ மழையால் இது தேவைப்படும். இது செய்வார்கள் இதனால் அது உயரும் என்று சொல்லப்படும் கருத்துக்களையும், பிராக்டிக்கலையும் பார்ப்போமா…?

பருவமழை நன்றாக இருந்தால் தான் முதலீடு அதிகரிக்கும் :

பருவமழை நன்றாக இருந்த காலங்களில் அந்நிய நிகர முதலீட்டாளர்கள் கூடுதலாகவே முதலீடு செய்திருக்கிறார்கள். உதாரணமாக 2007 மற்றும் 2010 -ம்  ஆண்டுகளில் பருவ மழை இந்தியா முழுவதும் நன்றாக இருந்த போது 2007-ல் 80,914 கோடி ரூபாயும், 2010ஆம் ஆண்டு அது வரை இல்லாத  உச்சமான 1,79,674 கோடி ரூபாயும் வெளிநாட்டவர்களால் நமது பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த சந்தைகளில்  முதலீடு செய்யப் பட்டிருக்கின்றன.

ஆனால் வறட்சி நிலவிய காலமான 2014ல் 2,56,213 கோடி ரூபாய் முதலீடு செய்தது இன்று வரை சாதனையாக இருக்கிறது. ஆக பருவ மழையை விட வேறு சந்தையை உயர்த்தும் செய்தி இருந்தால் கூடுதலாகவே முதலீடுகள் வந்து குவியும் என்பது நிதர்சனம். 2000 முதல் 2015 வரை அந்நிய நிகர முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு விவரங்களை அட்டவணை 2-ல் காணவும்.

பருவமழை நன்றாக இருந்தால் பணவீக்கம் குறையும் :

2010 ஆம் ஆண்டு பருவ மழை நன்றாக இருந்த போது தான் இந்தியாவில் இது  வரை இல்லாத அளவாக பணவீக்கம் 12 சதவிகிதமாக இருந்தது. இதன் மூலம் பருவ மழை நன்றாக இருந்தால் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்கிற  முடிவுக்கு நாம் வர முடியாது என்பது புரிந்திருக்கும்.

 அது மட்டுமின்றி 2014 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் வறட்சி நிலவிய போது பணவீக்கம் அதிகரிப்பதற்கு மாறாக  முறையே 6.37 மற்றும் 5.88 சதவிகிதம் என்கிற அளவில் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2002 முதல் 2015 வரையான இந்தியாவின் ஆண்டு சராசரி நுகர்வோர் பணவீக்கத்தை அட்டவணை 2ல் பார்க்கவும்.

பருவ மழைக்கு பயிர் கடன் :

மழை நன்றாக பெய்தால் பயிர் கடன் வாங்குவார்கள் என்று சொல்கிறார்கள், ஆனால், எஸ்பிஐ மற்றும் விஜயா போன்ற வங்கிகளின்  மொத்த வருமானம் மற்றும் நிகர வருமானம் 2002 தொடங்கி 2015 வரையான கால கட்டங்களில் குறையவே இல்லை. அதாவது பருவ மழை நன்றாக இருந்த காலத்தில் அந்த வங்கிகளின் வளர்ச்சி வழக்கமான அளவே இருந்தது.

விவசாய நிறுவனப் பங்குகள் :

பருவமழை நன்றாக இருந்தால் விவசாயத்திற்கு தேவையான ஸ்பிரேயர்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. வறட்சி நிலவிய காலங்களில் கூட பேயர் க்ராப்சயின்ஸ், தனுகா அக்ரிடெக், ரா லிஸ் இந்தியா போன்ற விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் கூட 2002 முதல் 2014 வரை சீரான வளர்ச்சியை கண்டிருக்கிறது. 2014 மற்றும் 2015 என்று தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் வறட்சி நிலவியதால் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் மட்டும், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மற்றும் நிகர லாபத்தில் ஒரு சிறு தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.

எஃப்எம்சிஜி பங்குகள் :

ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோத்ரேஜ் கன்ஸ்யூமர், கோல்கேட் பாமோலிவ் போன்ற எஃப்எம்சிஜி நிறுவனங்களின் நிகர விற்பனை மற்றும் நிகர லாபத்தை பார்த்த உடனேயே பருவமழைக்கும், பங்குக்கும் சம்பந்தமில்லை என்பதை மூன்றாவது முறையும் உறுதி செய்து கொள்வீர்கள். நெஸ்ட்லே நிறுவனம் மேகி பிரச்னையால் தான் குறைந்தது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இரு சக்கர வாகனம், டிராக்டர் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் :

ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எஸ்கார்ட்ஸ், வி.எஸ்.டி டில்லர்ஸ் போன்ற நிறுவனங்களும் பருவ மழை என்பதை ஒரு பொருட்டாக பார்க்காமல், வளர்ந்து வந்திருப்பதை பார்க்கவும். எனவே நல்ல பொருட்களை தயாரிக்கும், நல்ல  சேவையை வழங்கும் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் காலம் தாண்டி வளர்ந்து லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதை மீண்டும் நாம் பருவ மழையின் பெயரில் உணர முடிகிறது.

பங்குகள் பற்றிய விவரங்களைஅட்டவணை 3ல் பார்க்கவும்.

விவசாய ஏற்றுமதிகளும், அந்நிய செலாவணிகளும் :

இந்தியாவின் 2014 – 2015 -ம்  நிதி ஆண்டிற்கான மொத்த ஏற்றுமதி 18,96,348 கோடி ரூபாய். அதில் 1.8 லட்சம் கோடிக்கு இந்தியாவிலிருந்து விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் இன்றைய தேதியில் நிலவும் உலகப் பொருளாதார குழப்ப நிலை, கச்சா எண்ணெய் விலை சரிவு, கமாடிட்டி பொருட்களின் விலை சரிவு போன்ற காரணிகளால் சர்வதேச அளவில், பல நாடுகள் இறக்குமதி செய்ய தயாராக இல்லை. கடந்த பிப்ரவரி 2016 வரையான நிதி ஆண்டில், 238.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதுவே கடந்த பிப்ரவரி 2015ல் 286.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சூழ்நிலையில், நம் இந்தியாவில் நன்றாக மழை பொழிந்து, விவசாயப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து, வாங்க ஆள் இல்லை என்றால் எப்படி அந்நிய செலாவணி உயரும்.

மொத்தத்தில் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர் களுக்கும் பங்கு வர்த்தகத்தை மேற்கொள்ள பருவ மழை ஒரு காரணமே தவிர, பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் முழு சக்தி அல்ல. அதோடு நல்ல நிறுவனப் பங்குகள் எப்போதும் நன்றாக செயல்படும் என்பதும் தெரிகிறது.

இருப்பினும் தற்போது சந்தை பருவமழையை காரணமாக வைத்து தான் உயர்ந்திருக்கிறது. எனவே இதே பருவமழையை காரணமாக வைத்து அடுத்த ஆறு மாதங்களில் அதிக லாபம் தரும் பங்குகளை ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகர் பரிந்துரைத்துள்ளார்.

மஹிந்திரா & மஹிந்திரா :

தற்போதைய விலை : ரூ. 1,323.65

இலக்கு விலை : ரூ. 1,650, ஸ்டாப் லாஸ் : ரூ. 1,250

உலக அளவில் டிராக்டர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது இந்த நிறுவனம். அதோடு இந்த நிறுவனம் மஹிந்திரா ஹாலிடே, மஹிந்திரா லைஃப் ஸ்பேஸ், மஹிந்திரா சிஐஇ, மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்று பல நிறுவனங்களின் ஹோடிங் கம்பெனியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல நிறுவனத்திற்கு சந்தையில் குறைந்த மதிப்பீடே கிடைத்திருக்கிறது.

அதோடு கடந்த ஆகஸ்ட் 2015ல் இந்தப் பங்கு தன் வாழ்நாள் உச்சமாக ரூ.  1441 என்கிற விலையை தொட்டு பக்கவாட்டிலேயே வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் மாதாந்திர சார்ட்டைப் பார்த்தால் கடந்த மாதங்களில் பக்கவாட்டிலேயே நிலைபெற்று வர்த்தகமாகி வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கூடுதல்  மழைப் பொழிவு இருப்பதால் டிராக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இந்தப் பங்குகளை வாங்கலாம்.

அட்டவனையை  தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் :

தற்போதைய விலை : ரூ. 365.60

இலக்கு விலை : ரூ. 450, ஸ்டாப் லாஸ் : ரூ. 351

விவசாயத்திற்கு தேவையான பாசன பி.வி.சி (Polyvinyl chloride) பைப்புகளை நிர்வகிக்கும் சந்தைகளில் 25 சதவிகிதத்திற்கு மேலான சந்தையை ஃபினோலெக்ஸ் வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மொத்த உற்பத்தி திறன் 90,000 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. வரும் 2018 -ம் நிதி ஆண்டிற்குள் இந்த உற்பத்தித் திறனை 3.8 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம் தீட்டி வேலை நடந்து வருகிறது.

இந்தப் பங்கு தற்போது தன் வாழ் நாள் உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதோடு கடந்த பிப்ரவரி 2016ல் மொத்த இந்திய சந்தையும் இறக்கத் தில் வர்த்தகமாகி வந்த போது இந்த நிறுவனப் பங்குகள் மட்டும் தன் ஏற்றப் பாதையில் விலை ஏறிய படியே வர்த்தகமாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பருவநிலை நன்றாக இருக்கும் காலங்களில் இதன் விற்பனை இன்னும் கூடுதலாகி பங்கு விலையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கோரமண்டல் இன்டர்நேஷனல்

தற்போதைய விலை : ரூ.  219.45

இலக்கு விலை : ரூ.  273, ஸ்டாப் லாஸ் : ரூ. 204

இந்தியாவின் மிகப் பெரிய பாஸ்பேட் உரத் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடம் இந்த நிறுவனத்திற்குரியது. இந்த நிறுவனம் முருகப்பா குழுமத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்தக் குழுமத்தின் செயல்பாடுகளும் கார்ப்பரேட் கவர்னென்ஸ் என்றழைக்கப்படும், நிறுவன நிர்வாக மற்றும் செயல்பாடுகளும் நன்றாகவே இருக்கின்றன.  இந்தப் பங்கு கடந்த சில மாதங்களாக பக்கவாட்டிலேயே வர்த்தகமாகி வந்திருக்கிறது. அதோடு இந்தப் பங்கு 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜை விட கூடுதல் விலைக்கே வர்த்தகமாகி வருகிறது. அது மட்டுமின்றி இதன் மல்டிபில் ரெசிஸ்டன்ஸ் விலையான 204 ரூபாயோடு இதன் கேப் அப்கள் வெட்டிக் கொண்டு வர்த்தகமாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஹீரோ மோட்டோகார்ப் :

தற்போதைய விலை : ரூ. 2997.05

இலக்கு விலை : ரூ. 3600, ஸ்டாப் லாஸ் : ரூ. 2880

இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர், இந்த நிறுவனம் என்பதை சொல்லத் தேவை இல்லை, கடந்த காலங்களில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் சற்றே சுணக்கம் கண்டாலும் அடுத்த ஆண்டுகளில் நல்ல ஏற்றமே கண்டு வந்திருக்கிறது.இந்த நிறுவனப் பங்குகள் கடந்த 72 வாரங்களாக கன்சாலிடேட் ஆகி வர்த்தகமாகி வருகிறது. அதோடு இதன் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்ம் மூவிங் ஆவரேஜ்களை விட இந்தப்  பங்குகளின் விலை அதிகரித்தே வர்த்தகமாகி வருகின்றன.

thanks to vikatan.com

Leave a Reply