பல்லடுக்கு மாடி கட்ட விதிமுறைகள் என்ன?
சென்னையில் இன்று வானுயரக் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. பல்லடுக்கு மாடிக் கட்டிடம் என்றழைக்கப்படுகின்றன இந்த வகைக் கட்டிடங்கள். அதாவது, நான்கு தளத்துக்கு மேல் கட்டிடம் இருந்தாலோ அல்லது 15.25 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் இருந்தாலோ பல்லடுக்கு மாடிக் கட்டிடம் எனப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர ஊரமைப்பு இயக்கம் (DTCP) ஆகியவை பல்லடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்புகள். பல்லடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
பல்லடுக்கு மாடிகளுக்கான நிபந்தனைகள்
1. சொத்துக்கு ஒட்டிய சாலை வழி குறைந்தபட்சம் 18 மீட்டர் (60 அடி) இருக்க வேண்டும்.
2. மனையின் முகப்புப் பக்கம் குறைந்தபட்சம் 25 மீட்டர் இருக்க வேண்டும்.
3. தளப்பரப்புக் குறியீடு (FSI) 1.5 முதல் 2.5 கட்டிடங்களுக்கான தன்மையைப் பொருத்து அமைய வேண்டும். மருத்துவமனைக் கட்டிடங்களுக்குக் கூடுதலாக 0.25 எஃப்.எஸ்.ஐ. அனுமதி வழங்கப்படும்.
4. கட்டிடங்களின் அதிகபட்ச உயரம் முதல் வகையில் தரைத்தளத்துடன் 6 மாடி இருக்கலாம். (அதிகபட்சமாக 24 மீட்டர் உயரம்).
இரண்டாம் வகை கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து 8 மாடி இருக்கலாம். (அதிகபட்சமாக 30 மீட்டர் உயரம்).
முதல் வகை மற்றும் இரண்டாம் வகை கட்டிடங்களின் உயரம் 60 மீட்டர் இருக்கலாம் (சொத்தின் அருகே உள்ள சாலை குறைந்தபட்சம் 18 மீ (அ) 60 அடி இருக்க வேண்டும்).
5. சிஎம்டிஏ-வின் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பட்டா மனையின் அளவு முதல் வகையில் 1200 ச.மீட்டர், இரண்டாம் வகையில் 1500 ச.மீட்டர், மூன்றாம் வகையில் 2500 ச.மீட்டர் இருக்க வேண்டும். நகர ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்கு உட்பட்ட குறைந்தபட்ச மனையின் அளவு 9,600 சதுர அடியாக இருக்க வேண்டும்.
6. அருகே உள்ள கட்டிடத்துக்கான குறைந்தபட்ச இடைவெளி (SetBack) 7 மீட்டர் இருக்க வேண்டும்.
7. மனையினுள் வண்டிகளின் போக்குவரத்துக்குக் குறைந்தபட்ச வழி 7.2 மீட்டர் இருக்க வேண்டும்.
8. மனையின் அளவு 10,000 சதுர மீட்டருக்கு (1 ஹெக்டர்) மேல் இருந்தால் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பரப்பளவை பொருளாதாரத்தில் பின் தங்கிய நபர்களுக்காக ஒதுக்க வேண்டும். மேற்படி கட்டிடங்கள் 45 ச.மீட்டர் (464 சதுர அடி) பரப்பளவுக்கு மேல் இருக்கக் கூடாது.
9. 100 குடியிருப்பு கட்டிடங்களுக்கு மேல் இருந்தால் கழிவு சுத்திகரிப்பு உட்கட்டமைப்பு இருக்க வேண்டும். 50 குடியிருருப்புகளுக்கு மேல் இருந்தால் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன் அனுமதி பெற்று அமைக்க வேண்டும். இந்த வசதி பாதாளச் சாக்கடைத் திட்டம் இல்லாத பகுதிகளுக்குப் பொருந்தும்.
10. தாசில்தாரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட நிலம் புறம்போக்கு நிலம் அல்ல என்பதை உறுதி செய்யவும், நில சீர்திருத்தச் சட்டம் 1961, நில உச்சவரம்புச் சட்டம் 1978-ன் படி மழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகளின் கீழ் நிலம் வராது என்பதற்காக இந்தத் தடையில்லா சான்றிதழ் தேவை.
11. 2,500 ச.மீட்டருக்கு மேல் மனை இருந்தால் 10 சதவீத நிலத்தை திறந்தவெளி இட ஒதுக்கீடுக்கு வழங்க வேண்டும். மேற்படி நிலமானது தொடர்ச்சியான நிலமாக இருக்க வேண்டும்.
12. தாசில்தாரிடமிருந்து திட்டவரைபடம், பட்டா, சிட்டா, ஃடவுன் சர்வே, மனை விபரங்கள் அ-பதிவேடு விவரம், கிராம வரைபடம் மற்றும் அந்தக் கிராமத்தில் நீர் மேலாண்மை தகவல்களைத் தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும்.
13. சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடமிருந்து எழுத்து பூர்வமான சட்ட ஆலோசனை அறிக்கை பெற வேண்டும். மேலும் நோட்டரி வழக்கறிஞரிடம் சொத்தின் அனைத்துப் பிரதி ஆவணங்களிலும் கையொப்பம் பெற வேண்டும்.
14. மழை நீர் சேகரிக்கும் முறை மற்றும் சூரிய சக்தியால் தண்ணீர் சுடும் வசதிகளை கட்டுமான வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
15. பல்லடுக்கு மாடிக் கட்டிடம் அமைய உள்ள நிலத்தில் கட்டிடத்தின் தாங்கும் தரம் எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்ய, மண் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
16. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் மண் சோதனை அறிக்கைகள் முழு விவரங்கள் மற்றும் வரைபடங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
17. மேலும் பல்லடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு, தீயணைப்புத் துறை, தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை (மனை சாலைகளில் அமைந்தால்), விமான போக்குவரத்துத் துறை, தொலைக்காட்சி நிலையம் அல்லது வானொலி நிலையம், போக்குவரத்துக் காவல் துறை, மின் வாரியத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.