பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு தடை
கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் கொலையாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட மனோகரனின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ம் தேதி தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் திடீரென உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோகரனின் மறு ஆய்வு மனு மீதான விசாரணை, அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். அக்காள், தம்பிகளான முஸ்கானும், ரித்திக்கும், அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஓட்டுநர்களாலேயே கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். மனோகரன் மீது வழக்கு நடைபெற்ற நிலையில் குழந்தைகளை கடத்த கூட்டுச் சதி செய்தது (120 பி), குழந்தைகளை பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் (364 ஏ), 12 வயதுக்குட்பட்ட குழந்தையை கற்பழித்தல், கூட்டு சேர்ந்து கற்பழித்தல்(376 (2)) எப் மற்றும் ஜி, கூட்டு சேர்ந்து கொலை செய்தல் (302, 302 உடனிணைந்த பிரிவு 34), ஆவணங்களை மறைத்தல் (201, ஐபிசி) ஆகிய பிரிவுகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மனோகரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 20ம் தேதி மனோகரனுக்கு தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் திடீரென உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது