பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி: புதிய திட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரையிலும் மாணவ-மாணவிகளை கட்டாயத் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்றிருக்கும் கொள்கையை, 5-ஆம் வகுப்பாக குறைப்பது தொடர்பான புதிய திட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளை 8-ஆம் வகுப்பு வரையிலும் கட்டாயத் தேர்ச்சி அடைய வைப்பது தொடர்பான கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வித் தொடர்பான மத்திய அறிவுரை வாரியத்தின் துணைக் குழுக்கள் கூட்டத்தில், கட்டாயத் தேர்ச்சி தொடர்பான கொள்கையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன.
இதனடிப்படையில், மாணவ-மாணவிகளை கட்டாயத் தேர்ச்சி அடையச் செய்வது தொடர்பான கொள்கையில் கட்டுப்பாடு கொண்டு வருவது தொடர்பான திட்டத்தை தயாரித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பி வைத்தது.
அந்த திட்டத்தில், 8-ஆம் வகுப்பு வரையிலும் கட்டாயத் தேர்ச்சி அடையச் செய்யும் கொள்கையின் காரணமாக, மாணவ-மாணவிகளுக்கு தேர்வின்மீது பயமில்லாமல் போய் விட்டது; இதனால் அவர்கள் மத்தியில் கல்வி மீதுள்ள விருப்பம் குறைந்து, ஒழுங்கீனம் அதிகரித்து விட்டது; எனவே 8-ஆம் வகுப்பு வரையிலும் கட்டாயத் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கையில், 5-ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாயத் தேர்ச்சி என்று கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு, மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறை கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “சம்பந்தப்பட்ட அரசுகள் (மாநில அரசுகள்), தேவை என்று கருதும்பட்சத்தில், 6, 7 அல்லது 8-ஆம் வகுப்பு பயிலும்போது மாணவர்களை தேர்ச்சியடையாமல் செய்வது தொடர்பான விதியை உருவாக்கிக் கொள்ளலாம். மாணவர்களை மீண்டும் தங்களது வகுப்புத் தேர்வுகளை எழுத வைக்கலாம். இதுதொடர்பாக 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ஆவது பிரிவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திருத்தம் கொண்டு வரலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.