பஸ் தினத்தை தடுக்க பக்கா பிளான் போட்ட சென்னை போலீஸ்.
சென்னையில் நேற்று முன் தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரி ஆரம்பித்த முதல் நாளிலேயே மாணவர்கள் பஸ் தினத்தை கடைபிடித்ததால் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பஸ் தினத்தை கடைபிடிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் பஸ் தினம் கொண்டாடப்படுவதை தடுக்க நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் ஊழியர்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10 அதிரடி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:
* பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பஸ்களை ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், பஸ்களின் கூரை மீது ஏறிநின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
* கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.
* கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளை கண்டிப்பாக சோதனை செய்யவேண்டும்.
* கல்லூரிகளின் நுழைவுவாயில், மாணவர்கள் விடுதி, கேண்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
* கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
* வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம்.
* மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* பஸ்சில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
* வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பலாம்.
* மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.