பாகவதத்தில் சிவ நாம மகிமை
சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மகிமையைத் தீவிர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம். இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.
விஷ்ணுவின் மகிமைகளை, சரித்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷாயணியின் கதை வருகிறது. அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷாயணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மகிமையைச் சொல்லியிருக்கிறார் பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள்.
அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோ தாக்ஷாயணியாக வந்த ஸாஷாத் பராசக்தி. அதுவும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சொன்னாள்?
தகப்பனார் தக்ஷண் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷாயணி என்று அழைக்கப்பட்ட தேவி. சதி என்பதுதான் அவளுடைய இயற் பெயர்.
ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது. பரமேஸ்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்” என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.
பரமேஸ்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி’ என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்திரர்களில் தக்ஷண் ஒருவன். அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், `அதாரிடி` பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள்.
ஈஸ்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு சதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாசத்துக்கு அனுப்பிவைத்தான். அதோடு பெண் மாப்பிள்ளை உறவைக் கத்தரித்துவிட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் `இன்வைட்’ பண்ணவில்லை.
யஜ்ஞவாடத்தில் ஈஸ்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷாயணிக்கு “ஏண்டா வந்தோம்?” என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. அதற்கப்புறம் தக்ஷண் அவளை பிரியமாய் வரவேற்காததோடு, சிவ துவேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.
இங்கேயிருந்து போய்விடலாமா? போவது என்றால் எங்கே? பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது? அங்கே போகலாமா? ஏன், என்ன யோசனை? போக வேண்டியதுதானே? போனால், ‘நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தைத் தேடிக்கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்துவிட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்?’ என்று பரமேஸ்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா? இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர்.
என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்க மாட்டார். ஆனால் என் மனசே குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று, அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் சல்லாபம் செய்யும்போதே நடுவில் ‘தாக்ஷாயணி’ என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்? அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா? சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது? அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷ்டமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக்கொள்ள வேண்டியிருப்பதைவிடப் பெரிய தண்டனை இல்லை. அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும். எங்கே போவது என்று யோசித்தோமே. இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்துவிடுவோம் என்று தியாக சங்கல்பம் பண்ணிக் கொண்டுவிட்டாள்.
யக்ஞ குண்டத்துக்குப் பக்கத்தி லேயே அம்பாள் ஈஸ்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடித்துப் போய்விட்டாள் என்பது பாகவதக் கதை.
இப்படி பதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் பிராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷணைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே’ என்று நினைத்து அவனிடம் அந்த நாம மகிமையை அம்பாள் சொல்வது வருகிறது.
அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. அதுவும் இந்த சந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்கு மேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.
‘சிவேதர` – ‘சிவனுக்கு இதரமானவர்’. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்’ என்று அம்பாள் சொல்வது தக்ஷணைத்தான். சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள, அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?
‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா’. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம’ சொல்லணு மென்றுகூட இல்லை. அவ்வளவு சிரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும்.
எப்படிச் சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக்கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா? ஊஹும், ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது, சிவனை நினைத்து, மனசைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்’ என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும். ‘சிவப்பு அரிசி வடாம்’ என்கிற மாதிரி எதையோ சொல்லிக்கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்துவிட்டால் கூடப் போதும் …
பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே சமஸ்த பாபத்தையும் போக்கிவிடும். சத்தியங்களுக்கெல்லாம் மேலான சத்யமாக, ப்ராண தியாக சமயத்திலே சாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்கியம் இது.‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’ என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய் விடும் என்றுதானே அர்த்தம்?
தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் சித்தியாகிவிடும். கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் ப்ரபத்தி, ஞான சாதனை எல்லாவற்றையும்விடப் பரம சுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங் களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக்கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாம உச்சாடனம்தான் அது.