பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழாவில் கபில்தேவ், கவாஸ்கர் நவ்ஜோத்சிங் சித்து
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கானின் அழைப்பையேற்று, முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் அவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கான் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று சிறு கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வரும் 11ஆம் தேதி இம்ரான்கான் பதவியேற்பார் என தெரிகிறது.
இந்த நிலையில் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சித்து, “இது மிகப்பெரிய கௌரவம். நமது நாட்டினுடைய மற்றும் அரசினுடைய வெளியுறவுக் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால், இந்த அழைப்பு அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல, தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்டது. அவர் அரசியலில் கீழே இருந்து மேலே வந்துள்ளார். அவரை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர், பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோரையும் இம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது