தமிழிலும் சரி, இந்திய திரையுலகிலும் சரி எத்தனையோ சரித்திர படங்கள் வந்துள்ளது. ஆனால் அதில் பக்கம் பக்கமாக வசனங்களும், வாள் வீச்சும், ரீலுக்கு ஒரு பாடலும்தான் இருக்கும்.ஒரு சரித்திர படத்தை இவ்வளவு பிரமாண்டமாய், அதுவும் போர்க்காட்சிகளில் எது உண்மையான காட்சிகள், எது கிராபிகஸ் காட்சிகள் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு திரைப்படம் எடுக்க முடியும், அதுவும் இந்தியாவில் எடுக்க முடியும் என்றால் அது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.
கைக்குழந்தையோடு மழையில் நனைந்து கொண்டு ஒரு மிகப்பெரிய அருவியில் அருகே ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்புடன் தள்ளாடி வருவதில் இருந்தே கதை தொடங்கிவிடுகிறது. தன்னுடைய உயிரை கொடுத்து அந்த குழந்தையை காப்பாற்றுகிறார் ரம்யா கிருஷ்ணன். தண்ணீரில் மிதந்துவரும் குழந்தையை கண்டெடுத்து வளர்க்கும் ரோகிணி தம்பதியினர், அந்த குழந்தையை தங்கள் குழந்தையாகவே வளர்க்கின்றனர்.
குழந்தை வளர்ந்து பெரியவன் ஆக ஆக, அந்த அருவியின் மேல் ஏறும் ஆசையும் வளர்கிறது. பலமுறை அருவியில் ஏற முயற்சித்து தோல்வி அடைந்த நிலையில் ஒருநாள் தேவதை வடிவில் இருக்கும் தமன்னாவின் வழிகாட்டுதலின்படி அருவியின் உச்சியை அடைகிறார் பிரபாஸ். அங்கிருந்து பார்த்தால் மகிழபுரி என்ற நாடு இருப்பதும், அந்த நாட்டில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி புரிந்து வருவதும், அந்த கொடுங்கோலனிடம் சிக்கியுள்ள மகாராணியை மீட்க ஒரு புரட்சிப்படை வேலை செய்து வருவதையும் தெரிந்து கொள்ளும் பிரபாஸ், அந்த புரட்சிப்படையில் உள்ள தமன்னாவை காதலித்து, காதலுக்காக மகாராணியை மீட்க புறப்படுகிறார். அப்போதுதான் தெரிகிறது அந்த ராஜ்ஜியமே பிரபாஸின் முன்னோர்களுடையது என்றும் சங்கிலியால் கட்டுண்டு இருப்பது தனது தாயார் என்றும். தாயாரை கொடுங்கோலனிடம் இருந்து மீட்டாரா? என்பதுதான் கதை.
ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் புதுமுகம்தான். கட்டுமஸ்தான் உடலுடன் அருவியில் ஏறத்துடிக்கும்போது வெளிப்படுத்தும் நடிப்பு, தமன்னாவை கண்டவுடன் காதல் கொள்வது, சங்கியில் கட்டுண்டு இருப்பது தனது அன்னை என்று தெரிந்தவுடன் காட்டும் கோபம், போரில் செய்யும் ராஜதந்திரம் என படம் முழுவதும் பிரபாஸ் பிரமாதமான நடிப்பை கொடுத்திருந்தாலும், நமக்கு என்னவோ டப்பிங் படம் பார்ப்பது போன்ற பிரமைதான் ஏற்படுகிறது. பிரபாஸுக்கு பதில் நம்மூர் விக்ரம் அல்லது அர்ஜூன் இந்த கேரக்டரில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த படத்தின் நாயகி கண்டிப்பாக தமன்னாதான். அனுஷ்கா அடுத்த பாகத்தில்தான் நாயகியாக வருவார் போலும். தமன்னாவிற்கு ஒரே ஒரு பாடல் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் ஆக்சன் காட்சிகள்தான். வாள் சுழற்றும் வேகம், கண்களில் காட்டும் கோபம், பிரபாஸின் மேல் காதலில் விழுவது என படம் முழுவதும் நிறைவாக செய்துள்ளார். சங்கிலியால் கட்டப்பட்ட கைதியாக நடித்திருக்கும் அனுஷ்கா, கண்கள் மற்றும் முகத்தில் காட்டும் கோபம், அருந்ததியை ஞாபகப்படுத்துகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் எப்படியோ, அதேபோல்தான் ராணாவும். ராணாவில் வில்லத்தனமான நடிப்பும் சூப்பராக இருந்தால் அவரது முகம்கூட படம் பார்த்து முடித்த பின்னர் மனதில் பதியவில்லை.
படையப்பா படத்திற்கு பின்னர் வெயிட்டான கேரக்டர் ரம்யா கிருஷ்ணனுக்கு. அவரும் கேரக்டரின் வெயிட்டை உணர்ந்து அபாரமாக நடித்துள்ளார். வசன உச்சரிப்பில் அவர் காட்டிய அழுத்தம் அவருடைய கேரக்டரை மனதில் நிற்க வைக்கின்றது. நாசர், சத்யராஜ் இருவருக்குமே அதிக வேலையில்லை என்றாலும் நடிப்பில் ஓகே ரகம்.
எம்.எம்.கீரவானியின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் ஒட்டவில்லை. டப்பிங் படப்பாடல் போலத்தான் இருக்கின்றது. ஆனால் ஒரு சரித்திர படத்துக்கே உரித்தான பின்னணி இசை. ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்ட சவுண்ட் எபெக்ட்டுக்கள் அபாரம்.
கடைசி அரைமணி நேர போர்க்காட்சிகளுக்காக கண்டிப்பாக எஸ்.எஸ்.ராஜமவுலியை பாராட்ட வேண்டும். லார்ட் ஆப் தி ரிங்ஸ், கிளாடியேட்டர் போன்ற படங்களில் அமைக்கபட்டதை போன்ற பிரமாண்டமான போர்க்காட்சிகள். நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் இவற்றுடன் கிராபிக்ஸ் கலந்து அபாரமாக படமாக்கியுள்ளார். ஆனால் அந்த அரை மணி நேரம் தவிர மீதியுள்ள காட்சிகள் சராசரி படத்தில் வரும் காட்சிகள். அதுவும் முதல் பாதியில் அடிக்கடி பாடல்கள் வந்து கதையை இடையூறு செய்கின்றது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு குத்துப்பாட்டும் உண்டு. மேலும் படத்தை சத்யராஜ் பேசும் ஒரு சஸ்பென்ஸ் வசனத்துடன் முடித்து, கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வைத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.
மொத்தத்தில் கடைசி அரை மணி நேர பிரமிப்புக்காக ஒருதடவை பார்க்கலாம்.
Rating: 3.5/5