பாஜகவில் திடீரென சேர்ந்த முன்னாள் இஸ்ரோ தலைவர்! ஏன் தெரியுமா?
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் நேற்று முன்தினம் திடீரென பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். ஏற்கனவே ஒருசில குற்றச்சாட்டுக்கள் மாதவன் நாயர் மீது இருந்த நிலையில் அரசு நிறுவனங்களில் பணியாற்ற கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கு தடை விதிக் கப்பட்டது. இந்நிலையில், மாதவன் நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் தொலைநோக்கான வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்பரீதியாக என்னால் முடிந்த பங்களிப்பு செய்வேன். கேரளாவின் வளர்ச்சிக்கும் பணியாற்றுவேன்.
இஸ்ரோவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார். இஸ்ரோ தலைவராக சிவன் கடந்த ஆண்டு பொறுப்பேற்றது நேர்மறையான மாற்றம். அந்தப் பதவிக்கு சிவன் தகுதியானவர். எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு மத்திய அரசிடமோ பிரதமர் மோடியிடமோ நான் பேசவில்லை.
நமது அரசியல் சாசனம் மதரீதியான சுதந்திரத்தை அளித்துள்ளது. தனிப்பட்ட உரிமைகள் மற்றும் மதசுதந்திரம் தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. மத விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது. இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.