பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நஜ்மா ஹெப்துல்லா, நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். புதிய செயற்குழுவில் உறுப்பினராக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சேர்க்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அமைப்புகளில் தேசிய செயற்குழுவும் ஒன்று. இந்த அமைப்பில் தற்போது புதிதாக மத்திய அமைச்சர்களான சுரேஷ் பிரபு, விரேந்திர சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். செயற்குழுவிலிருந்து மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஸ்மிருதி இரானி மற்றும் நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த மாற்றத்தை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் மூத்த தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தொடர்கின்றனர். புதிய உறுப்பினர்களாக அமைச்சர்கள் வி.கே.சிங், ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூருவில் கூடும் என கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட பின்னணி பாடகர் பபூல்சுப்ரியோ, எம்.பி. கிரண் கேர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.