தீபாவளியை களைகட்ட செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம் போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும், ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகின்றன என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
‘காற்று மாசு ஏற்படும்’ என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சில நேரங்களில் வெடிக்கக்கூடும். அந்த தீப்பொறி பட்டு கண்கள் பாதிக்கப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். பட்டாசு விபத்துகளால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படாது. ஆனால் உடல் பாகங்களில் சேதம் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பட்டாசு விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் கூறியதாவது:- * பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். *பெரியவர்களின் துணையுடன் மட்டுமே சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். * புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக்கூடாது. பருத்தி ஆடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம். * பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.