பாராட்டும்போதே நினைத்தேன்: திமுகவின் விமர்சனம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ
கஜா புயல் ஏற்படும் முன் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக பாராட்டும்போதே இவர்கள் பின்னால் ஏதோ வம்பு செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன், அதேபோல் நடந்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வேகமாக பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் திமுகவின் சுயரூபம் தெரிந்துவிட்டது. ஆறு மாவட்டங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கெல்லாம் நிவாரணப் பணிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. சேதம் அடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் திமுகவினர், உள்ளூர் திமுகவினரை பொதுமக்கள் போல் வைத்து நிறுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏதோ பொதுமக்களே போராட்டக்களத்தில் ஈடுபடுகிறார்கள் எனும் மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். திமுகவின் திட்டம் நிறைவேறாது. நம்பியார் நம்பியார்தான். எம்ஜிஆர் எம்ஜிஆர்தான். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.