பார்வையற்ற மாணவர்களின் வசதிக்காக ஒரு புதிய ஆப்ஸ்

பார்வையற்ற மாணவர்களின் வசதிக்காக ஒரு புதிய ஆப்ஸ்

பார்வை திறன் குறைந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை எளிதில் மொபைல் போனில் படிக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதுநாள்வரை பிரெய்லி முறையில் படித்து வந்த பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த புதிய வசதியின் மூலம் எங்கிருந்தும், எப்போதும் வேண்டுமானாலும் பாடப்புத்தங்களைப் படிக்கலாம்.

பார்வை திறன் குறைந்த மாணவர்கள்

எளிதில் தங்களுடைய பாடங்களைக் கேட்பதற்கு உதவியாக செல்போன் வசதியையும் மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இந்த வசதி குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ராஷ்ட்ரிய மத்யாமிக் சிக்‌ஷா அபியன் (RMSA) பிரிவின் இயக்குநர் கண்ணப்பனிடம் பேசினோம். “இந்தியாவிலேயே முன்னோடியாகத் தமிழகத்தில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக சாம்சங், காக்னிசன்ட் மற்றும் புக்‌ஷேர் நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியினை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

பள்ளிக்கல்வித்துறைஇதுநாள்வரை பார்வையற்ற மாணவர்கள் தங்களுடைய பாடங்களை பிரெய்லி முறையில் படித்து வந்தார்கள். பிரெய்லி புத்தகங்கள் கனமானதாகவும், சாதாரண புத்தகத்தை விட இரண்டு மடங்கு பெரிய வடிவிலும் இருக்கும். இதனால் அனைத்து இடங்களிலும் எடுத்துச் சென்று படிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்தச் சூழலை மாற்றி, எளிய வகையில் படிக்க உதவும் வகையில் ஆடியோ வடிவில் பாடப்புத்தகங்களை வழங்கும் யோசனையில் உருவானதே இந்தத் திட்டம்.

இந்தத் திட்டத்தின் மூலம் பார்வையற்ற மாணவர்களுக்கு மொபைல் போனில் பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்து வழங்குகிறோம். அவர்கள் தங்களுடைய பாடங்களைத் தேவைப்படும் நேரங்களில் எளிதில் கேட்டு பயன்பெறலாம். பாடப்புத்தகங்களைத் தவிர இதர டிஜிட்டல் புத்தகங்களையும் கேட்கும் வசதியும் செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 100 மாணவர்களுக்கு மொபைல்போன் கருவியை வழங்கி இருக்கிறோம். இந்த ஆண்டு 150 மாணவர்களுக்கு மொபைல் போன் வசதியுடன் பாடத்திட்டங்களை வழங்கி இருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், இதர பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அடையாளம் கண்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார் கண்ணப்பன்.

இந்த ஆடியோ புத்தகங்களை அச்சில் படிக்க முடியாத மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள் விருப்பப்படி ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடங்களைக் கேட்கலாம். புக் ஷேர் இணையத்தளத்தில் தமிழக மாணவர்களுக்காக 371 புத்தகங்கள் ஆடியோ வடிவில் இருக்கின்றன. இதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களும் அடங்கும். இதைத்தவிர இதர, ஆங்கில கதைகளையும், வரலாற்றுப் புத்தகங்கள், பொது அறிவு நூல்களையும் படிக்கும் வசதியும் இருக்கிறது. புத்தகங்களை எளிதாக அடையாளம் காண தேடும் வசதியும், புத்தகங்களை அடையாளம் கண்டு தங்களுடைய வாசிப்பு பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் டெய்சி DAISY என்ற பார்மேட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்ஸை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். இந்த முறையில் பாடங்களை கேட்பதுடன் அவர்களுடைய கேள்விகளையும் பதிவு செய்துகொள்ள முடியும். மேலும், ரிவைண்ட், ரிப்ளே போன்றவற்றையும் செய்ய முடியும் புக் ஷேர் இணையத்தளத்தில் ஐந்து லட்சத்துக்கு அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. மாணவர்கள் கோரிக்கை வைத்தால் இதர நூலக புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்த முடியும்.

இந்தப் புத்தகங்களை மற்ற மாணவர்களும் பயன்படுத்த முடியுமா என்று இயக்குநர் கண்ணப்பன் கேட்டோம். “தற்போது ஆடியோ புத்தக திட்டத்தைப் பார்வையற்ற மாணவர்களின் பயன்பாட்டுக்காக் கொண்டுவந்திருக்கிறோம். இவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மற்ற மாணவர்களுக்கும் விரிவுபடுத்தலாம்.” என விளக்கமளித்தார்.

Leave a Reply