பாலஸ்தீன கலை விழா: கலையைப் போரால் தோற்கடிக்க முடியாது!
‘காஸா 51’ என்ற பாலஸ்தீனக் கலை விழா , சென்னையின் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீபத்தில் நடைபெற்றது. ஜூலை 14-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில் பாலஸ்தீன இளைஞர்களின் கலைப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. காஸாவின் மீது 2014 -ல் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய படையெடுப்பின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தக் கலைப் படைப்புகள் ஒவ்வொன்றும் மனித வன்முறையான போரின் கோரமுகத்தையும், அன்பின் வலிமையையும், கலையின் வீச்சையும் உணரவைக்கின்றன.
இந்தக் கலை விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சியில் பதினொரு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையுள்ள பாலஸ்தீனச் சிறுவர்களும் இளைஞர்களும் உருவாக்கிய படைப்புகள் இடம்பெற்றிருந்தன. பென்சில் ஓவியங்கள், ஒளிப்படங்கள், வண்ண ஓவியங்கள், டிஜிட்டல் ஆர்ட், சிறுகதைகள், குறும்படங்கள், இசை, மின்னஞ்சல்கள் (கடிதங்கள்) எனப் பல விதங்களில் இந்த இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியில், மஹ்மூத் அல்குர்து (Mahmoud Alkurd) என்ற 22 வயது இளைஞரின் டிஜிட்டல் ஆர்ட் படைப்புகள் பாலஸ்தீன இளைஞர்களின் வாழ்வின் மீதான ஏக்கங்களையும் மனஉறுதியையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தன.
பாலஸ்தீனத்தில் 25 ஆண்டுகள் நாடக சிகிச்சையாளராக (Drama Therapist) பணியாற்றிய ஹைதராபாதைச் சேர்ந்த மஹ்நூர் யார் கான் இந்தக் கலை விழாவை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ‘தி கல்ச்சர் அண்ட் ஃப்ரீ தாட் அசோசியேஷன்’ (The Culture and Free Thought Association) என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த விழாவை மஹ்நூர் ஒருங்கிணைத் திருக்கிறார். இந்தியாவில் பெங்களூரு, சென்னையைத் தொடர்ந்து இன்னும் ஆறு நகரங்களுக்கு இந்த ‘காஸா-51’ கலை விழா பயணிக்கவிருக்கிறது.
சென்னையில் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, சென்னைப் பல்கலைக்கழகம், லொயோலா கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி, ஸ்பேஸஸ் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கலை விழா நடைபெற்றது. “இந்தத் திருவிழாவில் பாலஸ்தீனத்தின் முப்பது இளம் படைப்பாளிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 2014-ல் இஸ்ரேலின் படையெடுப்பு காஸாவின் சிறுவர்களையும், இளைஞர்களையும் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை இந்தப் படைப்புகள் ஆழமாக நமக்கு உணர்த்துகின்றன. காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் வாழ விரும்புகிறார்கள். அங்கிருக்கும் இளைஞர்களும், சிறுவர்களும் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தைத் தூரிகைகளால் குணப்படுத்த முயற்சி செய்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தக் கலைப் படைப்புகள். இந்த விழாவுக்கு ஆல்காட் பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பு அளப்பரியது. ஒரு சிறுவன், எங்களிடம் வந்து, ‘பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடக்கிறது என்றால் அந்தச் சிறுவர்களை இங்கே வந்துவிடச் சொல்லுங்கள். அவர்களை என் பெற்றோரும், தாத்தா பாட்டியும் பார்த்துக்கொள்வார்கள்’ என்று சொன்னான். இதைக் கேட்ட பிறகு, அங்கிருந்த எல்லோரும் நெகழ்ச்சியடைந்துவிட்டார்கள். சென்னை மாணவர்கள், காஸா சிறுவர்களுக்காக வரைந்த ஓவியங்களுடன் அவர்களுக்காக எழுதிய செய்திகளையும் மொழிபெயர்த்து அங்கிருக்கும் சிறுவர்களிடம் சேர்க்கவிருக்கிறோம்” என்று சொல்கிறார் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தீபா ராஜ்குமார்.
பாலஸ்தீன இளைஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் பாலஸ்தீனச் சூழலைப் பற்றிய விரிவுரைகள், கலந்துரையாடல்கள், திரையிடல்கள், தமிழ், ஆங்கிலம், அரேபிக் உள்ளிட மொழிகளில் கவிதை, சிறுகதை வாசிப்பு, நாடக அரங்கேற்றம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. “கவிஞர் சுஹேர் ஹமீதின் கவிதைகளை ‘ஐ வில், ஐ வில் நாட்’ (I will, I will not) என்ற தலைப்பில் நாடக வடிவில் இந்தக் கலைத் திருவிழாவுக்காக உருவாக்கியிருக்கிறோம். இந்த நாடகத்தை பெங்களூரு திருவிழாவிலும் செய்தேன். இப்போது சென்னையிலும் செய்திருக்கிறேன். இதை வன்முறைக்கு எதிரான ஒரு நடனம் என்றும் சொல்லலாம்” என்கிறார் நாடகக் கலைஞர் திரிபுரா கஷ்யப்.
பாலஸ்தீன இளைஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் பாலஸ்தீனச் சூழலைப் பற்றிய விரிவுரைகள், கலந்துரையாடல்கள், திரையிடல்கள், தமிழ், ஆங்கிலம், அரேபிக் உள்ளிட மொழிகளில் கவிதை, சிறுகதை வாசிப்பு, நாடக அரங்கேற்றம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. “கவிஞர் சுஹேர் ஹமீதின் கவிதைகளை ‘ஐ வில், ஐ வில் நாட்’ (I will, I will not) என்ற தலைப்பில் நாடக வடிவில் இந்தக் கலைத் திருவிழாவுக்காக உருவாக்கியிருக்கிறோம். இந்த நாடகத்தை பெங்களூரு திருவிழாவிலும் செய்தேன். இப்போது சென்னையிலும் செய்திருக்கிறேன். இதை வன்முறைக்கு எதிரான ஒரு நடனம் என்றும் சொல்லலாம்” என்கிறார் நாடகக் கலைஞர் திரிபுரா கஷ்யப்.
இந்நாடகம் மட்டுமல்லாமல் இந்தத் திருவிழாவுக்காக, ‘ஜூலையின் துயரங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை அரபி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பி.கே. அப்துல் ரஹிமான். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஜே.பி.ஏ.எஸ் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் துறைத் தலைவர். இந்தச் சிறுகதைகள் அனைத்தும் போருக்குப் பின், பாலஸ்தீன இளைஞர்களால் எழுதப்பட்டவை.
2014 இஸ்ரேல் படையெடுப்புக்குப் பிறகு, காஸாவில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை என்பது மஹ்நூர் யார் கான் சொல்லும் செய்திகளால் உறுதியாகின்றன. “கிழக்கு ஜெருசலேமில், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனர்களின் வீடுகளை இஸ்ரேல் கைப்பற்றிவிடுகிறது. அத்துடன், காஸாவின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களையும் கிழக்கு ஜெருசலேமில் வசிப்பவர்களையும் திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை” என்கிறார் அவர்.
இந்த ‘காஸா 51’ பாலஸ்தீனக் கலை விழா , பாலஸ்தீன இளைஞர்களின் வாழ்க்கை மீதான உறுதியை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.