பாலிவுட் படங்களுக்கு துபாயில் இருந்து நிதி வருகிறது” சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

பாலிவுட் படங்களுக்கு துபாயில் இருந்து நிதி வருகிறது” சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த படத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றையும் வரலாற்று குறிப்புகளையும் திரித்து கூறியுள்ளதாகவும், ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரமும் திரிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக, ராஜ்புத் சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்த படம் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியபோது, ‘
பெரும்பாலான பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதி வருகிறது. இதனை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. திரைப்படங்களில் வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றிய பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதியளிக்கப்படுகிறது. இதனை விசாரிக்க வேண்டுமென அரசுக்கு நான் கோரிக்கை வைக்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள படக்குழுவினர், ‘துபாயிலிருந்து நிதியளிக்கப்படுவதாக அவர் கூறுவதை அவரால் நிரூபிக்க முடியுமா? அலாவுதின் கில்ஜியை வில்லனாகவே இந்தப் படத்தில் காண்பித்துள்ளோம். படத்தைப் பார்ப்பதற்கு முன்பே கருத்து சொல்வது தவறு” என்று கூறியுள்ளனர்.

ரஜபுத்திர ராணி பத்மாவதி பாத்திரத்தில் தீபிகா படுகோன், இவரது கணவர் ராவல் ரத்தன் சிங் கேரக்டரில் ஷாகித் கபூர், டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் கேரக்டரில் ரன்வீர்சிங் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply