பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா?
பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் பானம். ஆனால் இந்த பாலை குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏன் தெரியுமா? அதில் கலக்கப்படும் கலப்படங்கள். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்
‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாலில் 68 சதவிகிதத்திற்கும் மேல் கலப்படம்’ என்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது தெரிய வந்திருக்கிறது.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில்தான் கலப்படம் செய்யமுடியும் என்பது சிலர் நம்பிக்கை. அதனால், மாடு வைத்திருப்பவர்களிடம் நேரடியாகச் சென்று பால் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால், பெரும்பாலான மாடுகளில், குறிப்பாக நகர்ப்புற மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலிலும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் பல விஷயங்கள் உண்டு. முக்கியமானது, ‘ஆக்சிடோசின்’ என்னும் ஹார்மோன் மருந்து. இந்த மருந்தை கால்நடைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று 2014 – ல் சட்டம் போட்ட பின்பும் கூட பலர் இன்னும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது என்ன ஆக்சிடோசின்? மருத்துவர் ராம்குமார்
விரிவாக விளக்குகிறார் நாளமில்லா சுரப்பி நிபுணர் டாக்டர் ராம்குமார்.
“உயிரினங்களின் உடம்பில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன். அன்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இதை 1906 – ம் ஆண்டு இங்கிலாந்து உடல் செயலியலாளர் சர் ஹென்றி டேல் கண்டறிந்தார். எருதுகளின் பியூட்டரி சுரப்பியிலிருந்து ஒருவித திரவத்தைக் கண்டறிந்த ஹென்றி டேல், அதை பிரசவகாலத்தில் கஷ்டப்படும் உயினங்களுக்குச் செலுத்திப் பார்த்தார் பிரசவம் மிக எளிதாக இருந்தது. அவருக்குப் பிறகு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் பிளேர் பெல், இந்த திரவத்துக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு ‘இன்ஃபன்டிபுலின்’ என்று பெயரிட்டார். இது மனிதப்பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு 1928. அதைச் செய்தவர் ஆலிவர் காம். அவர்தான் ‘ஆக்சிடோசின்’ என்று இதற்குப் பெயரிட்டார். இந்த ஹார்மோனைச் செயற்கையாக முதன்முதலில் தயாரித்தவர் அமெரிக்க உயிர்வேதியியலாளர் வின்சன்ட் டு விக்னியாட். உலகில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட முதல் ஹார்மோன் மருந்து ஆக்ஸிடோசின்தான். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது…”
இது உடலில் அன்பு, காதல், காமம் போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும்போது சுரக்கும். அதேபோல் பிரசவத்தின் போதும், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும் சுரக்கும்…”
மருத்துவர் ஸ்ரீகலாபிரசாத் ஆக்சிடோசின் பற்றி மகப்பேறு மருத்துவர் ஶ்ரீகலா பிரசாத் மேலும் சில தகவல்களைத் தருகிறார்.
“கர்ப்பப்பையில் குழந்தை முழுமையாக வளர்ந்த உடனே, தாய்க்கு இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். பிரசவ நேரத்தில் இந்த ஹார்மோன்தான் கர்ப்பப்பையைச் சுருங்கச் செய்து பிரசவம் ஏற்பட வழிசெய்யும். ஆனால் சிலருக்கு இந்த ஹார்மோன் சுரக்க தாமதம் ஏற்படும். அப்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட ‘ஆக்சிடோசின்’ மருந்து பயன்படுத்தப்படும். இந்த மருந்தே பிரசவ வலியைத் தூண்டுகிறது. பின்னர் பிரசவம் முடிந்த பின்னர் ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் இந்த மருந்தை பயன்படுத்துகிறோம். உயிர் காக்கும் மருந்துகளில் இதுவும் ஒன்று “
சரி… பசுக்களுக்கு ஏன் ஆக்சிடோசின் மருந்து?
சௌந்திரபாண்டியன்”கறவை மாடுகளிலிருந்து அதிகமாக பால் கறப்பதற்கு சிலர் இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி கறக்கப்படும் பாலை குடிக்கும்போது உடலுக்குப் பல்வேறு தீமைகள் உண்டாகும்” என்கிறார் முன்னாள் கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குனர் சௌந்திரபாண்டியன் .
“ஆக்சிடோசின் இயற்கையாகவே மாடுகளுக்குச் சுரக்கக் கூடியதுதான். கன்று போடும்போது கருப்பாதை விரிவடைந்து கன்றுக்குட்டி வேளியே வருவதற்கு ஆக்ஸிடோசின் சுரக்கும்.
ஆனால், மடியில் இருக்கும் பால் முழுவதையும் கரப்பதற்கு சிலர் ஆக்சிடோசின் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மாட்டுக்கு கிட்னி பாதிப்பு ஏற்படும். சினை பிடிப்பதில் சிக்கல் உண்டாகும். தொடர்ந்து இந்த மருந்தை பசுவுக்குக் கொடுத்து வரும்போது அடிக்கடி அதன் கர்ப்பப்பை விரிவடைவதால் தசைகள் பலவீனமடையும். இறப்பதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு. இப்படிக் கறக்கப்படும் பால் குடிப்பதால் பெரும் பாதிப்புகள் உண்டாகும். ஆக்சிடோசின் கலந்த பால் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும். இந்த மருந்தை கால்நடைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கிறது. மனிதர்களுக்குப் பயன்படுத்துவதாகச் சொல்லி வாங்கி சிலர் தனியாக விற்பனை செய்து வருகின்றனர்…” என்றார் அவர்.மருத்துவர் சிவராமன்
ஆக்சிடோசின் செலுத்திச் கறக்கப்படும் பாலைக் குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?
“ஹார்மோன் ஊசி போட்டு பால் கரக்கும்போது ஹார்மோன் துணுக்குகள் பாலிலேயே தங்கிவிடும். இது மனிதர்களுக்குப் பல பாதிப்புகளை உண்டாக்கும். பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்.” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
இப்படிக் கறக்கப்படும் பாலைக் குடிப்பதால் கண் பாதிப்புகள், பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய், ரத்த அழுத்த நோய், சிறுநீரகப் பாதிப்புகள், ஞாபகக் கோளாறுகள் ஆகிய பிரச்னைகள் உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பால் கறப்பதற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைகள் போட்டாலும் சிலர் அலட்டிக்கொள்ளாமல் பயன்படுத்தி, மக்களுக்கு நோய்களைப் பரப்பிவருகின்றனர். அடுத்த தலைமுறையே பாதிக்கும் இந்த அவலத்துக்கு முடிவு கட்ட அரசு முனைய வேண்டும்!