பாழடைந்த பள்ளியை பளிங்காக மாற்றிய சச்சின். டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

பாழடைந்த பள்ளியை பளிங்காக மாற்றிய சச்சின். டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
sachin
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாழடைந்த பள்ளி ஒன்றினை புதுப்பிக்க சச்சின் தெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் செய்த நிதியுதவியினால் புத்தம் புதிய பொலிவுடன் தோற்றமளிக்கின்றது. இதன் காரணமாக அந்த பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிர்வாகிகளும் சச்சினுக்கு டுவிட்டர் மூலம் நன்றியினை குவித்து வருகின்றனர்.

மேற்குவங்க மாநில மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ‘சொர்ணமயி சஸ்மால் சிக் ஷா நிகேதன்’ என்ற உயர்நிலை பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளூர் எம்.பி. பிரபோத் பாண்டேவை பள்ளி நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு உதவி கேட்டதாகவும் ஆனால் எம்.பி.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனதால் பள்ளி நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினரான சச்சினை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

பள்ளி நிர்வாகத்தினர்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த சச்சின் தெண்டுல்கர் அந்த பள்ளிக்கு தேவையான நிதியுதவிக்கு ஏற்பாடு செய்யும்படி மும்பை பாந்த்ரா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மும்பை கலெக்டர் உடனடியாக பள்ளி அமைந்துள்ள பகுதியின் மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு பள்ளியை ஆய்வு செய்து நிதி ஒதுக்க ஏற்பாடு செய்தார். இதன்படி, ரூ.76 லட்சம் ஒதுக்கப்பட்டு அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பணத்தின் உதவியால் நூலகம், ஆய்வகம், மாணவிகளுக்கு தனி இடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பளிங்கு கற்களுடன் பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளியின் திறப்பு விழாவுக்கு சச்சினை அழைக்க பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply