பிரதமர் நரேந்திர மோடி என்ன ஹிட்லரா? வைகோ
ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைக்க பிரதமர் மோடி, ஹிட்லரை போல செயல்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் நடைபெற்ற அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-
பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். பாராளுமன்றத்துக்கு தீ வைத்து விட்டு ஹிட்லர், கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டார்.
அது போல பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த அளவுக்கும் செல்வார். மத்திய பிரதேச மாநில தேர்தலில் பா.ஜ.க.வினர் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
வடமாநிலங்களில் ஓட்டு போட பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இதனை பா.ஜ.க.வினர் ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியது யார்? அது கவர்னராக இருந்தால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால் அது பச்சை துரோகம். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமனின் மறைவு வேதனை தருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் உயிர் பாதுகாவலனை இழந்து தவிக்கின்றனர்.
இவ்வாறு வைகோ கூறினார்.