‘பில்லா பாண்டி’ திரைவிமர்சனம்

‘பில்லா பாண்டி’ திரைவிமர்சனம்

தயாரிப்பாளர், வில்லன் நடிகராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாக புரமோஷன் ஆகி நடித்துள்ள படம் ‘பில்லா பாண்டி’. தனக்கேற்ற வேடத்தை தேர்வு செய்து நடித்துள்ள ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

அஜித் ரசிகர் மன்றம் நடத்தி வருவதோடு, பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து வீடு கட்டும் தொழில் செய்து வரும் ஆர்.கே.சுரேஷ், சங்கிலிமுருகன் பேத்தி இந்துஜாவுக்காக ஒரு வீட்டை கட்டுகிறார். ஒருபக்கம் ஆர்.கே.சுரேஷ் தனது மாமா மகள் சாந்தினியை காதலித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சங்கிலி முருகனின் பேத்தி இந்துஜா ஒருதலையாக ஆர்.கே.சுரேஷை காதலிக்கின்றார். இந்த நிலையில் வீட்டின் கிரகப்பிரவேசம் அன்று திடீரென தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகுகிறார் இந்துஜா. இதனால் மாமா மகள் சாந்தினி கோபித்து கொள்ள, இந்துஜாவும் அவரது குடும்பத்தினர்களும் ஒரு விபத்தில் சிக்கி, இந்துஜாவை தவிர அனைவரும் உயிரிழக்கின்றனர். இந்துஜா ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி போல் 7 வயது சிறுமியாக மாறிவிடுகிறார். இந்த நிலையில் மாமா பெண்ணை கைப்பிடிப்பதா? தன்னால் குடும்பத்தையே இழந்து மனநிலையிலும் மாற்றம் அடைந்த இந்துஜாவுக்கு துணையாக இருப்பதா? என்ற நிலை ஆர்.கே.சுரேஷுக்கு ஏற்படுகிறது. அவர் என்ன முடிவெடுத்தார்? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

ஆர்.கே.சுரேஷ் தனக்கேற்ற சரியான கேரக்டரை தேர்வு செய்துள்ளார். அஜித் ரசிகராக அலப்பறை கொடுப்பதிலும், மாமா பொண்ணை காதலித்து உருகுவதும், இந்துஜாவுக்கு ஊரே எதிர்த்தபோதிலும் அடைக்கலம் கொடுப்பதிலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் இந்துஜாவுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிடும் காட்சியில் கண்களை குளமாக்குகிறார். இதேபோன்று நல்ல கேரக்டரை தேர்வு செய்தால் விஜய்சேதுபதி போன்று பெரிய நடிகராக வர வாய்ப்பு உள்ளது.

‘மேயாத மான்’ இந்துஜாவும், சாந்தினியின் இரண்டு ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இருவருமே நடிப்பில் நிறைவை தருகின்றனர். தம்பி ராமையாவின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக தாயை அடித்துவிட்டு வா என்று மனைவி கூறியவுடன் அவர் வீறுகொண்டு எழுந்து செல்வதும், பின்னர் ‘பத்து மாதம் சுமந்து பெற்றாள்’ என்ற பாடலை கேட்டவுடன் தாய்ப்பாசத்தில் உருகுவதும் பிரம்மாதம்

சங்கிலி முருகன், ஜி.மாரிமுத்து மற்றும் ஆர்.கே.சுரேஷின் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். வில்லன் வேடத்தை இமேஜ் பார்க்காமல் தயாரிப்பாளரே நடித்துள்ளார். இளையவன் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசையும் அருமை.

இயக்குனர் ராஜ்சேதுபதி ஒரு உணர்ச்சிபூர்வமாக காதல் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய திரைக்கதையை அமைத்துள்ளார். தல அஜித் குறித்த வசனங்கள் ஓகே என்றாலும் கொஞ்சம் திகட்டும் அளவுக்கு இருக்கின்றது. கிளைமாக்ஸில் இந்துஜாவுக்கு குணமாகும் காட்சியை இன்னும் கொஞ்சம் யோசித்து வேறு மாதிரி அமைத்திருக்கலாம். மற்றபடி தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு திரைப்படத்தை தந்த ராஜ்சேதுபதிக்கு பாராட்டுக்கள்

பில்லா பாண்டி, பலே பாண்டி

ரேட்டிங்: 3.,5/5

Leave a Reply