பிளஸ் 2 பாடத் திட்டம் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. அதன்படி, 6,737 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பிருக்கிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும். கல்வியில் தமிழகம் முதலிடத்தில் திகழ நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்படிப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற அரசு சார்பில் இலவச ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும். தனியாருடன் இணைந்து பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டுவருவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டும் முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில், ‘கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்’ என்ற பெயரில் கவுன்சலிங் தர உள்ளோம்.
இதற்காக, தமிழகத்தின் 32 மாவட்ட தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என மாநிலம் முழுக்க மொத்தம், 541 இடங்களில் நடத்த உள்ளோம். பங்கேற்க வரும் மாணவர்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு, குடிநீர் வசதி செய்து தருவார்கள். ஏப்ரல் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சி மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும். இதில், மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஏதாவதொரு நாளில் கலந்து கொள்ளலாம்.
அறிவியல், பொறியியல், பொதுத்துறை நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்படும்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவருகிறோம். அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி, சிறப்பான வகையில் மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றார் செங்கோட்டையன்.
முன்னதாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படுவது அரசு தேர்வுத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.