பிளாஸ்டிக்கில் பசுமை வீடுகள்

பிளாஸ்டிக்கில் பசுமை வீடுகள்

plastic_2385450gநாம் தினந்தோறும் உண்டாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 56 லட்சம் டன். இந்தியாவில் மட்டும் இவ்வளவு என்றால், உலகம் முழுமைக்கும் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்தக் கழிவுகளை என்ன செய்வது என்பது மிகப் பெரிய கேள்விதான். இதைத் தடுக்க முடியுமா என்றால் அதுவும் கேள்விக்குரிய விஷயம்தான். பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வது எப்படி?

பிளாஸ்டிக் கழிவுகளை மறு உபயோகப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை நம்மால் ஓரளவு மேலாண்மை செய்ய முடியும். எந்த வகையில் மறு உபயோகப்படுத்தலாம் என்றால், அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்துக்கான தொட்டியாகப் பாவிக்கலாம். இவை இல்லாது பெரும் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை மறு உபயோகப்படுத்த சிறந்த வழிமுறை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவது ஆகும்.

இது இப்போது மேலை நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பரவலாகி வருகிறது. பெப்சி, ஃபாண்டா, பாட்டில்களைச் செங்கலுக்கு மாற்றாகப் பயன்படுத்திச் சிறிய அளவிலான வீடுகள் அங்கு கட்டப்படுகின்றன. இந்த நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்த முறையில் சிறிய அளவிலான வீடுகளைக் கட்டியுள்ளன. உதாரணமாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதலில் ஒரே அளவுள்ள பாட்டில்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை முதலில் மண்ணால் நிரப்பி அதைத் திடப்படுத்துகிறார்கள். அப்படி பாட்டில்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை ஒரே நிறமாக இருந்தால் அழகாக இருக்கும். அலங்கார வளைவுத் தூண் அமைக்கப் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தலாம். பாட்டில்களின் வாய்ப் பகுதி உள்ளே இருப்பதுபோல அடுக்கி மரபான முறைப்படி சிமெண்ட்டை பாட்டில்களுக்கு இடையில் பூசி கட்டிடம் கட்டப்படுகின்றன. இம்மாதிரி கட்டிடங்கள் அலுவலகங்கள், அகதிகள், வீடற்றோருக்கான குடில்கள் ஏற்படுத்தவும், பாடசாலைகள் அமைக்கவும் ஏதுவானதாக இருக்கும்.

நைஜீரியாவில் சுற்றுலாவாசிகளைக் கவர்வதற்காக இம்மாதிரியான பிளாஸ்டிக் பாட்டில்கள் வீடுகள் கட்டப்படுகின்றன. நவீன வசதிகளும் வீடுகளும் இதில் அடக்கம். வரவேற்பறை, கழிவறை, சமையலறை, படுக்கையறை ஆகியவை அடங்கிய பாட்டில் வீடு நைஜீரியாவில் யெல்வா கிராமத்தில் பிரபலம். 78 ஆயிரம் பாட்டில்களைக் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பாட்டில்களை வைத்துக்கட்டுவதால் அறைக்குள் நல்ல வெளிச்சம் வரும். அதனால் மின்சக்தி அதிகம் செலவாகது. இவை அல்லாது கூரையில் பாட்டில்களைப் பதிக்கும்போது அதன் உடல் பகுதியில் செடிகள், புற்களை வளர்க்கலாம். இதனால் வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும். அதுபோல பாட்டில்கள் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கலாம். பூந்தொட்டிகள் செய்யலாம். வீட்டுக்கான அழகு சாதனப் பொருள்களும் செய்யலாம்.

Leave a Reply