பிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம் ஏன் தெரியுமா?
கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் திடீரென டிரெண்ட் ஆன சராஹா செயலி தற்சமயம் இரண்டு பிளே ஸ்டோர்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டது.
சவுதி அரேபியாவை சேர்ந்த சராஹா என்ற செயலி கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமானது. உலகம் முழுக்க வேகமாக டிரெண்ட் ஆன சராஹா செயலி உடனடியாக ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் முதலிடம் பிடித்தது.
மக்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடம் சொல்ல விரும்பும் தகவல்களை ரகசியமாக தெரிவிக்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மககள் தங்களிடம் இருக்கும் குறைகளை திருத்தி கொள்ள முடியும் என செயலியை உருவாக்கிய தௌஃபிக் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் சராஹா செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சராஹா செயலி நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கத்ரினா கொலின்ஸ் தனது 13 வயது மகளுக்கு சராஹா செயலியில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை கண்டு அதிர்ந்து போனார். மகளுக்கு சராஹா செயலியில் இருந்து எக்கச்சக்கமான அவதூறு குறுந்தகவல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டதாக அவர் ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். குறுந்தகவல்களில் மிகவும் அறுவருக்கத்தக்க வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
செயலியில் மிகவும் மோசமான வழக்கம் பின்பற்றப்படுவதை கண்டு அதிர்ந்து போன கத்ரினா ஆன்லைனில் இது குறித்த புகாரை பதிவு செய்தார். இவர் அளித்த புகார் செயலியில் மக்களை இழவு படுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் கத்ரினா பதிவு செய்த புகார் படிவத்திற்கு 4,70,000 பேர் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் சராஹா செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் கூகுள் மற்றும் ஆப்பிள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. எனினும் கூகுள் மற்றும் ஆப்பிளுடன் இணைந்து சுமூக முடிவை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செயலியில் தீங்கு விளைவிக்கும் குறுந்தகவல்களை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படும்.
அந்த வகையில் கண்டனத்திற்குரிய குறுந்தகவல்கள் செயலியில் பகி்ர்ந்து கொள்ளப்படுவதை முற்றிலும் தடுக்க முடியும். என சராஹா செயலியை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான செயின்-அலாப்தின் தௌஃபிக் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டின் கூகுள் பிளே, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் தேடல்களிலும் சராஹா செயலியை கண்டறிய முடியாது. எனினும் ஏற்கனவே செயலியை பயன்படுத்துவோர் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.