பிள்ளையார் திருத்தலங்கள் & வழிபாடுகள்…
வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு!
வயல்களில் பயிர்களை பாதுகாக்க அத்தி மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம், நம் முன்னோர்களிடம் உண்டு. அறுவடை முடிந்த பின் குடியானவர்கள், அந்தப் பிள்ளையாருக்குச் செய்யும் பூஜையை விவரிக்கும் பாடல் இது.
பூவாம் துளசி பிள்ளையாருக்கு சாத்த
வெள்ளியரளி மாலை வேலவருக்கு சாத்த
காசரளிமாலை காத்தவனுக்கு சாத்த
வெள்ளைபிள்ளையாருக்கு நல்லெண்ணெயாம் காப்பு
ஓடு முச்சும் தேங்காய் உடைப்பேன்
பிள்ளையாருக்கு
பால் இளநி தேங்காய் நான் படைப்பேன்
பிள்ளையாருக்கு
கொத்தோடு மாங்காய் குலை நிறைந்த தேங்காய்
அச்சோடு வெல்லம் ஆலை வெல்லம் நூறு
கொப்பரையாம் பாவு ஓப்புதமாம் வேறு
தாரோட வாழை தலை வாழை நூறு
காயோடு வாழை கரு வாழை நூறு
பூனை தலை போல பொரி உருண்டை நூறு
எலித்தலை போல எள்ளுருண்டை நூறு
ஆனைக்காது போல அதிரசங்கள் நூறு
தட்டோடு மாலை தண்டமாலை நூறு
கொத்தோடு மாலை கொண்ட மாலை நூறு
அத்தனையும் சேர்ந்து அமோகமாம் பூஜை
சித்தி விநாயகனும் சினம் தணிந்தே வருவார்.
முத்தி அருள் புரிவார் முச்சூடும் வரம் கொடுப்பார்
சக்தியுள்ள எங்கள் முன்னோர் அத்திமரப்
பிள்ளையாரே!
பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஒரு பிரார்த்தனை!
கர்நாடகாவிலுள்ள யாத்திரை தலமான தி.நர்சீபுராவில் அகஸ்தேஸ்வரர் ஆலயம் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் மேடை மீது குமரக் கடவுளும், விநாயகப் பெருமானும் தரிசனம் தருகிறார்கள். அவருடைய பீடத்துக்கு அடியில் ஆதிசங்கரர் எழுதிய ஓலைகள் இருக்கின்றனவாம். பக்தர்கள் விநாயகரைத் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துவிட்டு கீழே வைப்பார்களாம். ஆனால், காரியம் நிறைவேறும் என்றால் மட்டுமே விக்கிரகத்தைத் தூக்க முடியுமாம். இது ஒரு அதிசயம்தான்.
செவிசாய்த்த விநாயகர்
சிவாலயங்களில் தேவாரப்பதிகம் பாடிவந்த சம்பந்தருக்கு திருச்சி கீழ் அன்பில் நகரிலுள்ள சத்தியவாகீஸ்வரரை வழிபட ஆசை. சிவன் சம்பந்தரைச் சோதிக்க காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாத சம்பந்தர் கரையில் இருந்தபடியே பாடினார். எனவே கோயிலில் வீற்றிருந்த பிள்ளையார் தன் யானைக் காதை சாய்த்து சம்பந்தர் பாட்டைக் கேட்டார்.
இன்றுகூட இக்கோயிலில் செவி சாய்த்த விநாயகரைத் தரிசிக்கலாம்.
குழந்தை விநாயகர்
கும்பகோணம் அருகில் திருவைகாவூர் தலத்தில் உள்ள ஸ்ரீவில்வநாதர் ஆலயம் பிரசித்திப்பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் அருகே அன்னையைப் பிரிய மனமில்லாதவராக காட்சியளிக்கிறார் குழந்தை கணபதி. சுமார் ஒன்றரை அடி உயரம். ஓரடி அகல அளவில் சிறிய மூர்த்தியாக தரிசனம் தருகிறார் இந்த பிள்ளையார்.
தான்தோன்றி விநாயகர்
மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது தான்தோன்றி பிள்ளையார் கோயில். இந்த விநாயகரை வணங்கிச்சென்றால் 18 படிகள் உள்ளன. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட முடியாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.