பிள்ளை வரம் அருளும் பாலைவனேஸ்வரர்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திலிருந்து சுமார் 1.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருபாலைவனநாதர் திருக்கோயில். அப்பரால் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் 27 தலங்கள் சோழவள நாட்டில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று இந்த பாலைவனேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
இத்திருத்தலத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம். அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள். ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.
இக்கோயிலின் சிறப்பம்சம் இது மட்டும்தானா? இல்லை. வேறு சிறப்புகளும் இவ்வாலயத்துக்கு உண்டு.
ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடவுளைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்தது. மேலும் தவத்தில் தாங்களே சிறந்தவர்கள் என்றும், தங்கள் மனைவிமார்களாகிய பத்தினி பெண்களின் கற்பே பெரிதென்றும் அவர்கள் கர்வம்கொண்டிருந்தனர். அந்தக் கர்வத்தின் காரணமாக கடவுளை நினைக்கவும், வழிபடவும் மறந்து போனார்கள்.
அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து அந்த ரிஷிகள் தவம் புரியும் தாருகாவனத்துக்கு அனுப்பினார். அதேபோல் தானும் பிச்சாடனர் வடிவம்கொண்டு அந்த முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.
மோகினி அவதாரம்கொண்ட திருமால், முனிவர்கள் அனைவரையும் தன் அழகால் மயக்கி, அவர்களின் தவத்தையும், அதன் பயனாகப் பெற்ற உயர்வையும் கெடுத்தார். இந்த நேரத்தில் சிவபெருமான் முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் மனைவியரிடம் பிச்சை வேண்டினார். அவரின் அழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள் சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் துவங்கினர்.
தாங்கள் வந்த வேலை முடிந்ததால் சிவபெருமானும், திருமாலும் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள் தங்கள் மனைவிகள் ஒரு அந்தணரின் அழகில் மனம் மயங்கியதை எண்ணி கோபம்கொண்டனர். இதற்கெல்லாம் காரணம் சிவபெருமான்தான் என்பதை அறிந்த அவர்கள் அனைத்துலகுக்கும் தலைவனான சிவபெருமானை தண்டிக்க எண்ணினர்.
அதன்படி விஷ விருட்சங்களை யாகப் பொருட்களாக்கி, வேம்பு, நெய் போன்றவற்றை தீயிலிட்டு வேள்வி ஒன்றை நடத்தினர். அந்த வேள்வியில் இருந்து பல ஆயுதங்கள் தோன்றின. அந்த ஆயுதங்களை ஈசனைக் கொல்ல ஏவிவிட்டனர். அவற்றைத் தடுத்த சிவனார் யாகத்தில் இருந்து தோன்றிய புலியைக் கொன்று தன் ஆடையாக்கிக் கொண்டார். இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது இத்திருத்தலத்தில் ஆகும்.
பாலைவனம், புன்னாகவனம், பிரம்மவனம், அரசவனம் போன்ற பல பெயர்களைக்கொண்ட இத்திருத்தலத்தில்தான் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வனவாசத்தின்போது தௌமிய மகரிஷியின் ஆலோசனையின் பேரில் வந்து வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை அறிந்து உணர்ந்து, அதன் பயனாக பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்றும் கூறப்படுகிறது.
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 370 அடி நீளமும், 260 அடி அகலமும் உடையது. முன்புறத்தில் 70 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை கோபுரமும், அதன் பின் 45 அடி நீளம் கொண்ட மூன்று நிலை கோபுரமும் அமைந்துள்ளன.
மூன்று நிலை கோபுரத்தைக் கடந்து சென்றால், மகா மண்டபம் அமைந்துள்ளது. அதன் இடப்புறம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இதற்கு நேர் எதிரில் நால்வர் சந்நிதி வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில் பாலைவனநாதர் லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தின் வடக்குப்புறத்தில் அழகே வடிவான தவளவெண்ணகை அம்பிகை சந்நிதி தனிக்கோயிலாக அமைந் துள்ளது. வரம் வேண்டி வந்தாருக்கு குறைவின்றி அருள்புரிந்து வாழவைக்கும் கற்பகத்தருவாய் காட்சி தருகிறாள், இந்த அம்பிகை. இந்த அன்னையை ஒரு கணம் தரிசித்தாலே போதும்; நம் கவலைகள் யாவும், இருந்த இடம்தெரியாமல் பறந்தோடிவிடும். அவ்வளவு சாந்நித்தியம் அம்பாளின் திருமுகத்தில்!
கருவறையில் இருந்து துவங்கி வலமாக வந்தால், கருவறை கோஷ்ட மூர்த்தங் களாக அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,
துர்கை, பிட்சாடனர் ஆகியோ ரைத் தரிசிக்கலாம். இவை மட்டுமன்றி, உட்பிராகாரத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஸதல விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தொடர்ந்து, வசிட்டர் பூஜித்த ராமலிங்கம்; மகாலட்சுமி, அர்ஜுனன் பூஜித்த அர்ஜுன லிங்கம், மலையத்துவசன் பூஜித்த மலையத்துவச லிங்கம் ஆகிய சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.
மேலும் வடக்குப்புற மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சந்நிதியும், வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும், கோயில் தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளன. வடகிழக்கு திசையில் நவகிரகங்கள், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பாக உட்பிராகாரத்தின் வலப்புறத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
திருமண பாக்கியம் மட்டுமன்றி குழந்தை பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம். இதுகுறித்து பேசிய கோயிலின் நீலகண்ட சிவாசார்யர், ‘‘குழந்தை வரம் வேண்டுவோர், தொடர்ந்து 11 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, அம்பாளையும் ஸ்வாமியையும் வேண்டிக் கொண்டு, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். 11-வது வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுச் சென்றால், பாலைவனேஸ்வரரின் திருவருளால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்றார்.
அப்படி, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மீண்டும் கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சமர்ப் பித்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
நாமும் ஒருமுறை பாலைவனேஸ்வரரைத் தரிசித்து, அவரின் திருவருளால் வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.