பிள்ளை வரம் தருவாள் அங்காள பரமேஸ்வரி

பிள்ளை வரம் தருவாள் அங்காள பரமேஸ்வரி

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் இருந்து மேற்காகச் செல்லும் கிராமத்துச் சாலையில், சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் வருவது எருமைவெட்டிப் பாளையம். இந்த ஊரின் கிழக்கு எல்லையில், சிறு குன்று போன்ற பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

‘நான்கு கன்னிகளைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழாது’ என்று சிவனாரிடம் வரம்பெற்றவன், மகிஷாசுரன். இந்த நிலையில், வனவாசத்தில் இருந்த ஸ்ரீராமனும் சீதாதேவியும் இந்தப் பகுதிக்கு வந்து தங்கினர். ஒரு நாள், சீதாதேவி ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும்போது அவள் முன் தோன்றினான் அசுரன். அவனைக் கண்டு பயந்த சீதாதேவி, ஸ்ரீராமனிடம் தஞ்சம் புகுந்தாள். அவர், தர்ப்பைப்புல் ஒன்றை எடுத்து நான்கு துண்டுகளாகக் கிள்ளி, நான்கு திசைகளிலும் போட்டார். மறுகணம், தர்ப்பைப்புல் துண்டுகள் நான்கும் தேவதைகளாக மாறின!

அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மரக்காலத்தம்மன், கைகாத்தம்மன் என வடிவெடுத்து நின்ற அந்த நான்கு தேவதைகளும் மகிஷாசுரனைத் துரத்தினர். தப்பித்து ஓடியவன், மகிஷாசுர பட்டணம் சென்று, எருமையாக உருமாறி அங்கிருந்த புண்ணியகோடி நதியில் பதுங்கிக் கொண்டான். அசுரனை விடாமல் துரத்திச் சென்ற அங்காள பரமேஸ்வரி, நதியில் இறங்கி அசுரனை சம்ஹாரம் செய்தாள். அதன் பிறகு, ஊர் மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, அந்த நான்கு தேவியரும் ஆளுக்கொரு திசையில், காவல் தெய்வமாக அமர்ந்தனர். அதன்படி, ஊரின் கிழக்கு எல்லையில் அமர்ந்தவளே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு, அம்மனின் மடியில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிரசாதமாக தருகின்றனர். இந்தப் பழத்தை சாறு பிழிந்து அருந்தினால், சங்கடங்கள் நீங்கி மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, துஷ்டனை அழித்த சக்தி. ஆதலால், காத்து- கருப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்கள் ஆகியோர் இங்கு வந்து, ஈரத் துணியுடன் அம்மனை வலம் வந்து வணங்குவதுடன், மூன்று நாட்கள் இங்கு தங்கி வழிபட்டுச் சென்றால் எல்லாப் பிணிகளும் அகலும் என்பது நம்பிக்கை.

Leave a Reply