பி.இ. கலந்தாய்வு: கட்டணத்தை குறைக்க அண்ணா பல்கலை. திட்டம்?
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது முழுவதும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், விண்ணப்பக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்த இறுதி முடிவை எடுத்து, அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு, 2015-16 கல்வியாண்டு வரை அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 400 பக்க தகவல் கையேட்டுடன் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 வசூலிக்கப்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடம் ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில், 2016-17 கல்வியாண்டு முதல் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டது. அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் கலந்தாய்வு விண்ணப்பம், தகவல் கையேடு அச்சடிக்கும் செலவு குறைந்ததால், விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். இருந்தபோதும் 2016-17 கல்வியாண்டு கலந்தாய்வின்போது கட்டணம் எதுவும் குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் உயர் கல்வித் துறைச் செயலர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் விண்ணப்பக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியது:
முன்னர் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டபோது விண்ணப்பக் கட்டணத்தின் மூலமாக ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் வசூலாகும். இப்போது விண்ணப்பிப்பது ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டதால், விண்ணப்பத்தை அச்சடிக்கும் செலவு முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது.
இதனால் செலவு குறைந்ததால், விண்ணப்பக் கட்டணத்தையும் குறைப்பது குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
பின்னர் அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.