புகை பிடித்தல்: புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படும் கொடுமை
இயற்கைக்கு எதிரான செயல்கள் அனைத்துமே மனிதகுலத்தை அழிப்பதற்கான முயற்சிகளே. மனிதர்கள், மனிதர்களிடம் இருந்து விடுபடத்தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். தனக்குள் தன்னைக் கொண்டாடும் தனித்த மயக்கநிலை பெரும்பாலானவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த மனநிலையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபார முதலைகள், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருள்களைச் சந்தைப்படுத்தி, பூமியைக் கொஞ்சம் கொஞ்சமாக வாழத் தகாத ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதன் பின்விளைவுகளை நாம் தெரிந்துகொள்ளாத வரை நோய்களும் மரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அப்படி நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அழிவுச் செயல்களில் ஒன்று, புகைப்பிடித்தல்.
புகை
தீய நண்பர்களுக்கு இணையாக பாவிக்கும் வறட்டு கௌரவ மனோபாவம்… பள்ளிப் பருவத்திலேயே தன்னைத் தைரியசாலியாகக் காட்டிக்கொள்வது… குறிப்பாக, பெண் தோழிகள் மத்தியில் வலம் வரத் துடிக்கும் கதாநாயக ஹார்மோன் சிக்கலில் தொடங்குகிறது இந்தக் கொடிய பழக்கம். புகைப்பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எத்தனையோ சட்ட திட்டங்களை, விழிப்புஉணர்வுப் படங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. நாம் மானத்தை இழந்து சாலையோரங்களில் சலம்பித் திரியும் குடிமகன்களுக்கு எதிராக மட்டுமே போராட்டம் செய்கிறோம். வெள்ளையும் சொள்ளையுமாக பகட்டு உடை உடுத்திக்கொண்டு போகிறபோக்கில் உங்கள் முகத்துக்கு முன்னே `ப்பூ…’ என ஊதிவிட்டுப் போகிறவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அந்த சிகரெட் புகையின் விபரீதம் தெரியுமா உங்களுக்கு?
புகைப்பழக்கம்
வருடக்கணக்கில் சிகரெட் (Cigarette) பிடிப்பவருக்கு ஏற்படும் வியாதிகள் கணக்கிலடங்காதவை. அது ஒருபுறம் இருக்கட்டும். நம் சுற்றுச்சூழலில் கலந்துவிட்ட அந்தப் புகைக் காற்றை சுவாசிக்கும், புகைப்பழக்கமே இல்லாத மற்றவர்களுக்கும் அதன் நச்சுத்தன்மையால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதைத்தான் `தன்முனைப்பற்ற புகைத்தல்’ (ETS – Environmental Tobacco Smoke) என்கிறார்கள். இந்த நச்சுப்புகையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, சிகரெட்டின் நுனிப்பகுதியில் வரும் புகை (Sidestream smoke), மற்றொன்று, சிகரெட் புகையை உள்ளிழுத்து வாய் மற்றும் மூக்கின் வழியாக விடக்கூடிய புகை (Mainstream smoke). இதை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் நினைத்துப் பார்க்க முடியாத கடுமையான சுவாச நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், ஒரு சிகரெட்டில் நச்சு வாயுக்கள், வேதியியல் மூலக்கூறுகள், வடிகட்ட முடியாத நுண் மூலப் பொருள்கள்… என ஏறக்குறைய 4,000 நச்சு ரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் உள்ள 60 வேதியியல் ரசாயனங்கள் நுரையீரல் (Lung cancer) மற்றும் வாய்ப்புற்று (Oral cancer) நோய்க்கான காரணிகளாக இருப்பதாக ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க மருத்துவக்கழகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கின்றன.
இந்த ஆய்வுகளின்படி புகைக்கும் கணவர்களிடம் எந்த அளவுக்கு கோட்டினின் (Cotinine) நச்சு இருந்ததோ, அதற்குச் சரிசமமாக மனைவிகளுக்கும் இருந்ததாக கண்டறிந்திருக்கிறார்கள். காற்றோட்டம் இல்லாத பூட்டிய வீடுகள், கேரவன்கள், அலுவலகங்கள், மதுபானக் கடைகள், கேளிக்கைக் கூடங்களில் நிரம்பியிருக்கும் ஆபத்தான காற்றும் புகை மண்டலமும் உங்களின் நுரையீரல் பாதையின் ஆழத்தை இறுக்கிப் பிடிப்பவை. இதை சுவாசிக்கும் கர்ப்பிணிகளின் சிசுவும் பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதிர்ச்சி தரும் இந்த ஆய்வுகள் குறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஏ.ஆர்.அருணாச்சலத்திடம் பேசினோம்.
நுரையீரல் பாதிப்பு
“புகையிலையில் மிக அதிகமாக புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஆர்செனிக் (Arsenic), அசிட்டால்டிஹைடு (Acetaldehyde), பென்ஸைன் (Benzene), கியூமின் (Cumene), எதிலைன் ஆக்ஸைடு (Ethylene oxide), நிக்கல் (Nickel), ஃபார்மால்டிஹைடு (Formaldehide), பொலோனியம் – 210 (Polonium-210), டொபெக்கோ – ஸ்பெசிஃபிக் நைட்ரொசமைன்ஸ் (Tobacco – specific Nitrosamines) போன்றவை ஆபத்தானவை. கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் சிசு பாதிப்படையும். தாயின் ரத்தநாளங்கள் வழியாக ரசாயன நச்சுத் துகள்கள் குழந்தையையும் பாதிக்கும். அதனால் சிலருக்கு உடனடி கருச்சிதைவும் ஏற்படும். குழந்தை பிறந்தாலும் குண்டாக, குட்டையாக, வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் புகைக்கும்போது, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அதே அளவான நிக்கோட்டின், சுவாசம் வழியாகச் செல்லும். கடும் நுரையீரல் தொற்று, சுவாசக் குழாய் அடைப்பு, நுரையீரல் காற்றுக் குழாய்களில் அழற்சி, கக்குவான், தொண்டை அடைப்பான், காதுகளில் கிருமித் தொற்று, காது கேளாமை, நுரையீரல் செயல்பாடு குறைவடைதல், அடிக்கடி மூச்சிரைப்பு, 40 சதவிகிதம் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
வளரும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் அதிகரிப்பதோடு, 30 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. பிறவகை புற்றுநோய்கள், இதய நோய்கள், உடனடி இறப்பும் (Sudden Infant Death Syndrome) ஏற்படலாம். சிகரெட்டைவிட பீடி, சுருட்டு போன்றவை மிக மோசமான தீங்குகளை விளைவிக்கக்கூடியவை. டென்டு (Tendu leaf) எனப்படும் இலைகளால் சுற்றப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட புகையிலைகள் 100 சதவிகிதம் ஆபத்தானவை. பீடியில் நிக்கோட்டினின் அடர்த்தி அதிகமாக உள்ளது. எனவே, அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பது என்பது வெறும் சிகரெட், பீடி மட்டுமல்ல மெல்லும் புகையிலைகளால் ஆன பான்பராக், ஹான்ஸ், ஹூக்காஸ், பைப்ஸ் எல்லாமும்தான். உயிரைக் கொல்லும் கார்பன் மோனாக்ஸைடு (Corbon monoxide), ஹைட்ரஜன் சயனைடு (Hydrogen cyanide) அதிகம் உள்ள புகையிலையின் பக்கம் திரும்பாமல் இருந்தால் உடல்நலனைப் பாதுகாக்கலாம். பெண்களைவிட ஆண்களுக்குத்தான் 90 சதவிகிதம் நிக்கோட்டினால் வரக்கூடிய புற்றுநோய்க்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தொடர்ச்சியாக புகைப்பவர் அல்லாமல், எப்போதாவது ஒன்றிரண்டு சிகரெட்டுகள் என்றாலும் அதற்கான பக்கவிளைவுகள் கண்டிப்பாக வரும். எனவே, புகைத்தாலும் தீமை. புகைப்பவர் அருகில் சுவாசித்தாலும் தீமை’’ என்கிறார் அருணாச்சலம்.
முதல் சிகரெட்டின் கங்கு அணைவதற்குள் அடுத்த சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்கும், 80 சதவிகிதத்துக்கும் மேலான புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் (Chain smokers) இருக்கிறார்கள். அவர்கள் மனந்திருந்தி ஆறுமாத காலம் புகைக்காமல் இருந்தால்கூட, நுரையீரல் மெள்ள மெள்ள தன் இயல்புநிலைச் செயல்பாட்டுக்கு முயற்சிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மக்களுக்காக உழைக்கிறேன் என மேடை ஏறி முழங்கிவிட்டு மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு புகைத்தாலும் காற்றில் கலக்கும் நிக்கோட்டின் நச்சு, அங்குள்ளவர்களையும் பாதிக்கச் செய்யும். இதுவா சமூக அக்கறை? `வீட்டுக்குள்தானே புகைக்கக் கூடாது. என் மனைவியின் மீது பெருங்காதலும் குழந்தைகளின்மீது பேரன்பும் இருக்கிறது’ என முகத்தோடு முகம் உரசி, இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்துவிட்டு எங்கோ ஒரு மூலையில் சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்தால், அந்தப் புகைப்படம் நிச்சயம் சுயநலமானது. பெண்களும் புகைக்கிறார்கள், இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது அது மிக மிகக் குறைவே. இன்னமும் கிராமப்புறங்களில் சுருட்டும் பீடியும் குடிக்கும் பாட்டிகள் இருக்கிறார்கள். விலையுயர்ந்த சாம்பல் கிண்ணங்களை (Ash tray) பரிசாகக் கொடுக்கும் ஆடம்பரமான நாகரிக வாழ்க்கைக்குப் பழகிய பெண்கள், கணவர்கள் விரல் இடுக்குகளில் சாம்பலை லாகவமாகச் சுண்டிப் புகைக்கும் அழகை அருகில் அமர்ந்து ரசிக்கிறார்கள். சிகரெட் வாசனை மனதுக்குப் பிடிப்பதாகவும், ஸ்டேட்டஸ் (status) எனவும் பெருமைப்படுகிறார்கள். இதெல்லாம் எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என கடலை எண்ணெயில் இருந்து கறிக்கோழி வரை அச்சுறுத்தும் வேதியியல் கூறுகளை அட்டவணைப்படுத்துகிறோம். ஆயிரக்கணக்கான நிக்கோட்டின்கள் கண்களுக்குப் புலப்படாத எமனாகக் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன. தம்மையும் அழித்து, பிறரையும் காவுவாங்கும் இந்தப் புகைப் பழக்கத்துக்குள் வீழ்ந்து கிடப்பவர்களுக்கு வாழ்க்கை என்ற நான்கு எழுத்துகள் எதை உணர்த்திவிடப் போகிறது. சமூகநலனுக்காக, தங்களின் குடும்பத்துக்காக, பெண்களால் எல்லாவிதத்திலும் நல்ல மாற்றத்தைத் தூண்டவும் துரிதப்படுத்தவும் முடியும். `புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றுகிறேன்…’ என்பதெல்லாம் கதைக்கு ஆகப்போவதில்லை. புகைவிடும் நெஞ்சு இனி புண்ணாகும். அதுவே புற்றுநோயாகவும் மாறும். உங்களை நம்பி யாரோ ஒருவர் எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதை எண்ணிப் பாருங்கள்… புகைப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக அதைக் கைவிடுங்கள்… உடல்நலனில் விழிப்புடன் இருங்கள்.