புதிய படிப்புகள்: அனுமதி பெற முடியாமல் திண்டாடும் சுயநிதிக் கல்லூரிகள்
சென்னைப் பல்கலைக்கழகம் 8 மாதங்களாகத் துணைவேந்தர் இன்றி இயங்கி வருவதால், புதிய படிப்புகளுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியாமல் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகள் சிக்கலைச் சந்தித்து வருகின்றன.
பொதுவாக, ஒரு கல்லூரி புதிய படிப்பைத் தொடங்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக விதிகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்த பிறகு, அனுமதி வழங்கக் கோகரி பல்கலைக்கழக்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, பல்கலைக்கழகம் ஒரு குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், படிப்பைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும் அல்லது குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும்.
ஆனால், 2016-17ஆம் கல்வியாண்டில் புதிய படிப்புகளைத் தொடங்க சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்த பல சுயநிதிக் கல்லூரிகளுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரிகள் மாணவர் சேர்க்கையைக்கூட இதுவரை நடத்த முடியவில்லை எனப் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்னை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் குழுக் கூட்டத்திலும் எழுப்பப்பட்டது. இதுகுறித்து சென்னை சிந்தி கல்லூரி முதல்வர் சத்தியநாராயணா கூறியதாவது:
எங்களது கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. மனிதவள மேம்பாடு, பி.காம். (சி.எஸ்.) ஆகிய மூன்று படிப்புகளைத் தொடங்க கடந்த மே மாதம் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதற்காக, பல்கலைக்கழக விதிகளின்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதோடு, தகுதி வாய்ந்த பேராசிரியர்களையும் நியமித்துள்ளோம். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகக் குழு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு, மே மாதத்திலேயே பல்கலைக்கழகத்துக்கும் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது.
ஆனால், இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. வேறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இந்த மூன்று படிப்புகளிலும் இதுவரை மாணவர் சேர்க்கையை நடத்த முடியவில்லை. முதல் பருவத் தேர்வும் தொடங்க உள்ளதால், இனி மாணவர் சேர்க்கையும் நடத்த முடியாது.
ஆனால், நியமனம் செய்துள்ள பேராசிரியர்களுக்கு எப்படி ஊதியம் அளிப்பது என்ற சிக்கல் எழுந்திருக்கிறது. இதுபோல மேலும் பல கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகத்திடம் முறையிட்ட போது, துணைவேந்தர் நியமனத்துக்குப் பிறகே எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும் எனக் கூறுகின்றனர் என்றார் அவர்.
இதுகுறித்து கல்விக் குழு உறுப்பினரும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கப் பொருளாளருமான ஜே. காந்திராஜ் கூறியதாவது:
சிந்தி கல்லூரியைப் போல, சென்னை நொளம்பூர், உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஆசிரியர்களை நியமித்துவிட்டபோதிலும், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இவற்றில் சில கல்லூரிகளுக்கு ஆய்வுக் குழுவையே பல்கலைக்கழகம் நியமிக்கவில்லை. இந்தப் பிரச்னைகளுக்கு துணைவேந்தர் இல்லாததே காரணம் எனப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஆர். தாண்டவனின் பதவிக் காலம் 17-1-2016 அன்றுடன் முடிந்த பிறகு, இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.