புதிய வட்டி விகிதத்துக்கு மாறுவது எப்படி?

புதிய வட்டி விகிதத்துக்கு மாறுவது எப்படி?

பண மதிப்பு நீக்கத்தால் எல்லா அரசு வங்கிகளிலும் டெபாசிட்டுகள் குவிந்தன; இது கிட்டத்தட்ட குறைந்த விலைக்கு நிறைய பொருட்கள் (உணவுப் பொருட்கள்) வாங்கிச் சேகரித்து வைப்பதுபோலத்தான். இருக்கிற சரக்குகளை, குறைவான லாபத்தில் விற்றால்தானே வியாபாரம் தழைக்கும்?

அதே போன்ற நிலையில்தான் இன்று வங்கிகள் உள்ளன. எளிதாக வாங்கக்கூடிய கடன்கள், வீட்டுக் கடனும் வாகனக் கடனும்தான். இவற்றில் வாகனக் கடனில் பெரிய லாபம் வராது. வீட்டுக் கடன், ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரை கொடுக்க முடியும். அதனால்தான் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 9 சதவீதம் குறைவான வட்டி விகிதம் என்பதை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

இங்கே ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அடிப்படை வட்டி விகிதத்தை வங்கிகள் தங்களுக்குச் சேர்கிற வைப்புத் தொகைக்கு ஏற்ப குறைத்துக்கொண்டே வருகின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உச்சபட்ச டெபாசிட் வட்டியை அடிப்படையாகக் கொண்டு காலக் கெடுவுக்கு ஏற்ப வட்டியைக் குறைக்கின்றன. இந்த வட்டி குறைப்புக்கு ஏற்ப கடன் விகிதத்தையும் வங்கிகள் குறைக்கலாம் என்ற அனுமதி உண்டு. ‘டெபாசிட் இணைந்த வட்டி விகிதம்’ என்று இது அழைக்கப்படுகிறது.

மேற்சொன்ன நிகழ்வின் விளைவாக நிறைய வங்கிகள் வட்டியைக் குறைத்துவிட்டன. அதனால்தான் வட்டி விகிதம் 8.6 சதவீதம் 8.5 சதவீதம் என்றெல்லாம் ஆக முடிகிறது. இதுபோல வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, உன்னிப்பாகக் கவனித்து வந்தால் உடனடியாக நமது வங்கிகளைத் தொடர்புகொண்டு நிலுவையில் உள்ள நமது கடனுக்கான வட்டியைக் குறைத்துக்கொள்ள முடியும். சரி, இந்த மாதிரி ஏற்கெனவே ஒரு கடன் வட்டி விகிதத்தில் இருக்கும் நாம் நமது வங்கிக் கடனை வேறொரு புதிய வட்டி விகிதத்துக்கு எப்படி மாற்றிக்கொள்வது, என்ற கேள்விகள் வரும். அதற்கான வழிமுறைகள்.

புதிதாக வட்டிக் குறைக்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்புக்கு நமது கடனை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு வங்கி வகுத்துள்ள வட்டி விகித மாறும் முறையில் (conversion) மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு நமது நிலுவைக் கடன் தொகைக்கு ஏற்ப வங்கிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

உதாரணமாக மூன்று வருடம் முன்பு ரூ.20 லட்சம் வாங்கிய கடனில் இன்றைய நிலுவை 18,50,000. இதில் 0.50 சதவீதத்தை வங்கிக்குச் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட ரூ.9250. இதனுடன் சேவை வரியையும் சேர்த்தால் ரூ.10500 ஆகிறது. இதை வாடிக்கையாளர் செலுத்தினால் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் குறைக்கிறார்கள். ஆனால், இந்தத் தொகை வங்கிக்கு கமிஷனாக வரும். உங்கள் கடனில் சேராது. சில வங்கிகள் இந்த கமிஷன் தொகைக்கு உச்சவரம்பு ரூ.25,000 என நிர்ணயித்துள்ளன.

இந்த மாற்று முறையில் இரு வகைகள் உள்ளன. இவற்றில் ஒன்றை நாம் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மாதாமாதம் செலுத்தும் தொகை குறையும். ஆனால், கடனின் காலக் கெடு அப்படியே மாறாமலிருக்கும். அதாவது ரூ.20 லட்சத்துக்கு ரூ.18,600 மாதத் தவணை செலுத்தி வந்தால் கடன் குறைப்பின் விளைவாக ரூ.17,500 ஆகக் குறையும்.

மாதாமாதம் செலுத்தும் தொகை குறையாது. ஆனால், காலக் கெடு குறையும். உதாரணமாக எஞ்சிய காலக் கெடு 17 வருடங்களாகக் குறையும். வாடிக்கையாளர்கள் தாமாகவே முடிவெடுத்து தங்களுக்குத் தோதான ஒரு விருப்ப முறையைத் தேர்ந்தெடுத்து வட்டி விகித மாற்றுக்கான படிவத்தில் கையெழுத்துயிட்டுத் தந்தால் போதுமானது.

Leave a Reply