புதிய வீடு வாங்க சேமிப்பது எப்படி?
நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனை எது தெரியுமா? சொந்த வீடு வாங்குவதுதான். சொந்த வீடு வாங்குவது என்பது சுலபமான காரியம் அல்ல. யதார்த்தமாகக் கூற வேண்டுமென்றால், யாரும் மொத்தப் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு சொந்த வீடு வாங்குவதில்லை. பெரும்பாலானவர்கள் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள்.
ஆனால், வீடு வாங்க வங்கியில் முழுக் கடனும் கிடைத்துவிடுகிறதா? நிச்சயம் கிடைக்காது. வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றாலும், வீடு வாங்குபவரிடம் ஒரு அடிப்படைத் தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, வீட்டின் மதிப்பில் 20 சதவீதத் தொகை வீடு வாங்குபவரிடம் இருக்க வேண்டும். இதை ‘டவுன்பேமன்ட்’ என்று சொல்வார்கள். இந்தத் தொகை இருந்தால்தான், உங்களால் வீடையே வாங்க முடியும். வங்கியில் கடனும் வாங்க முடியும்.
முதலீடு செய்யலாம்
உதாரணமாக, ரூபாய் 30 லட்சத்தில் வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாயாவது நீங்கள் ‘டவுன்பேமன்’டாகச் செலுத்த வேண்டும். இந்தப் பணத்தை முதலில் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். இந்தத் தொகை இருந்தால்தான், மேற்கொண்டு பணத்தை வங்கியில் கடனாகப் பெற முடியும்.
ஆனால், பலரிடமும் இந்த ‘டவுன்பேமன்ட்’ இருக்காது. வீட்டில் மனைவி நகையை அடகு வைப்பது அல்லது விற்பது, பூர்வீகச் சொத்தை விற்பது என மாற்று ஏற்பாடுகள் மூலமே இந்தத் தொகையைத் திரட்டுவார்கள். இந்த ‘டவுன்பேமன்ட்’ தொகையை இந்த முறையில் திரட்டாமல், சேமிப்பின் மூலம் திரட்டலாம். ஆனால், அதற்குச் சரியான திட்டமிடல் தேவை.
வீடு வாங்கலாம் என்று மனதுக்குள் யோசனை உதிக்கும்போதே, இத்தனை ஆண்டுகளுக்குள் வாங்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி முடிவெடுத்தால்தான் அதற்கேற்ப முதலீட்டைச் செய்யலாம். அந்தத் தொகையைக் கொண்டு நீங்கள் ‘டவுன்பேமன்’ட்டைச் சொந்தமாகக் கையில் வைத்துக்கொள்ளலாம்.
எதில் முதலீடு செய்ய வேண்டும்? ஒருவேளை நீங்கள், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீடு வாங்க உத்தேசித்தால், மியூச்சுவல் பண்ட் போன்ற வழியில் முதலீடு செய்யலாம். குறுகிய காலம் என்பதால், பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம். ஒருவேளை மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்கள் எனும்போது, பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களை தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வங்கி, தபால்நிலையச் சேமிப்பு, கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடே போதும்.
முதலீடு என்றவுடன் இஷ்டத்துக்கு எதையும் செய்துவிடக் கூடாது. கொஞ்சம் கவனமும் தேவை. உதாரணமாக, மாதம் உங்களால் 10,000 ரூபாய் சேமிக்க முடியும் என்றால், அந்த முழுத் தொகையையும் முதலீடு செய்யக் கூடாது. பேலன்ஸ்டு மியுச்சுவல் ஃபண்ட்களில் 5,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வது தேவையில்லை. குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது அது ரிஸ்க்கானதும்கூட.
தனி நபர் கடன் தவறு
இந்த விஷயத்தில் பலரும் செய்யும் ஒரு தவறு என்ன தெரியுமா? ‘டவுன்பேமன்ட்’ தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் மூலம் தொகையைத் திரட்டுவார்கள். இந்தக் கடன் வகைகளில் வட்டி அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கடன் மூலம் பணத்தைத் திரட்டும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனைத் திருப்பி அடைக்க நேரிடும். அதோடு வீட்டுக் கடனும் சேரும்போது, உங்களுடைய வாழ்வாதரத்துக்கான ரிஸ்க் அதிகரித்துவிடும். பொதுவாக ஒருவருடைய மாத வருவாயில் 40 சதவீதத்துக்கு மேல் கடன் வாங்குவது ஆரோக்கியமானது அல்ல.
அதே நேரம், ‘டவுன்பேமன்ட்’ தொகையைப் பெற்றோர், உறவினர், நண்பர்கள் மூலம் வட்டி இல்லாமல் திரட்ட முடிந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எஃப். தொகையிலிருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்னொரு விஷயம். ‘டவுன்பேமன்ட்’ தொகையைச் சேமிப்பதற்கு முன்பு உங்களுக்கு வேறு கடன் இருந்தால், சற்று யோசிக்க வேண்டும். அந்தக் கடனை முதலில் அடைத்தபிறகே வீடு வாங்க சேமிப்பது நல்லது. ஒரு வேளை நீங்கள் சேமிக்கும் தொகைக்குக் கிடைக்கும் வட்டியைவிட, நீங்கள் கடனுக்காகச் செலுத்தும் வட்டி அதிகமாகக்கூட இருக்கலாம். அதனால், அந்தக் கடனை முழுமையாக அடைத்த பிறகு, வீடு வாங்குவதற்குச் சேமிப்பதை யோசிக்கலாம்