புதுவை மத்திய பல்கலை பட்டமளிப்பு விழா: பட்டம் வழங்கினார் ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 3 ஆண்டுகளுக்கு பின் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 2013-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதன் பின்பு துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் மாணவ, மாணவியர் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் நிலையில்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் டாக்டர் அனிசா பி.கான் துணைவேந்தர் (பொ) பதவியேற்றதும் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் 24-வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் அனிசா பஷீர் கான் தலைமை தாங்கினார். துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி பட்டமளிப்பு உரையாற்றி 559 பேருக்கு தங்கப பதக்கங்கள், 55 ஆயிரம் பேருக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் வி.நாராயணசாமி சிறப்புரை ஆற்றினார். அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எப்.ஷாஜஹான், எம்.பி.் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.