புதுவை முன்னாள் முதல்வர் வீடு அருகே தேர் கவிழ்ந்தது. ஒருவர் பலி. 15 பேர் காயம்
நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில் தற்போது அவருடைய வீடு அருகே தேர் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீடு அருகே தர்மராஜா பாஞ்சாலி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 11ம் தேதி பிரமேற்சவ விழா சிறப்பாக தொடங்கி நேற்று பூக்குழி என்று கூறப்படும் தீ மிதி விழா நடைபெற்றது.
மேலும் கடந்த 16 ஆண்டுளாக ஓடாத இந்த கோவிலின் தேரை இந்த வருடம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து தேரை தயார் செய்தனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டின் பின்புறம் உள்ள தெருவில் தேர் நிலை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தேரை கோயிலுக்கு கொண்டு வர பக்தரகள் முயற்சி செய்தனர்.
அப்போது அருகில் இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் சிக்கியதால் பாலன்ஸ் தாங்காமல் தேர் சரிந்து விழுந்தது. தேருக்கடியில் சிக்கி சரவணன் என்ற தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.