புயல் எச்சரிக்கை: அண்ணா, அண்ணாமலை, சட்டப் பல்கலை. தேர்வு ரத்து
புயல் எச்சரிக்கையால் பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயலால் தமிழகத்தின் அநேக இடங்களில் நாளை மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பொறியியல் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அறிவித்துள்ளன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்த பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சட்டப் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக் கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், நாகை கடலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலைக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் 5 கடலோர மாவட்டங்களிலும், விழுப்புரத்தில் 2 தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.