புற்றில் குடிகொண்ட ஏழுமலையான்!
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோயில். காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் இதை ஸ்ரீசக்கரத்தாழ்வார் சிறப்பு வழிபாட்டுத் தலம் என்றும் பெருமாள் கோயில் என்றும் பக்தர்கள் பக்தியோடு அழைக்கிறார்கள்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மோகனூர் அருகில் உள்ள வாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் திருப்பதி ஏழுமலையான் மீது அளவுகடந்த பக்தி கொண்டு சிறு வயது முதல் திருமலையில் உள்ள ஏழுமலையானை வருடந்தோறும் நேரில் சென்று வணங்கி வந்துள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக, அவர் திருப்பதி செல்ல முடியவில்லை. தன்னால் ஏழுமலையானை நேரில் சென்று வணங்க முடியாத நிலையை உணர்ந்து, அருகில் உள்ள காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு ஆற்றில் இறங்கப் போனார். அப்போது மிகுந்த பிரகாச ஒளியுடன் சர்வ வல்லமையும் மிகுந்த திருப்பதி ஏழுமலையான் அவர் முன்பாக நேரில் காட்சி தந்து, “நான் ஆற்றின் அருகில் உள்ள புற்றில் குடிகொண்டு இருக்கிறேன். அதனால், நீ அங்கே நேரில் வந்து வணங்கி கேட்கும் வரத்தை இங்கேயே கேள். அதை நான் உனக்கும் இந்த இடத்தை நாடிவந்து வணங்குபவர்களுக்கும் வழங்குவேன்’’ என்றாராம்.
இதைக் கேட்ட அந்த முதியவர் அருகில் உள்ள புற்றைத் தேடிக் கண்டுபிடித்து வணங் கினார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் பலரும் இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இங்குள்ள பெருமாளின் மகிமையை உணர்ந்த ராமச்சந்திர நாயக்கர் என்னும் அரசர் தனது ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இதன் தல வரலாறு கூறுகிறது. இந்த இடத்தில் புற்று இருந்ததை மெய்ப்பிக்கும் விதமாக, கோயிலின் உட்புறத்தில் சிமெண்ட் தரை மற்றும் பளிங்குக் கற்களையும் தாண்டி, இப்போதும் புற்று மண் உருவாகின்றது. அதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்குகின்றனர். பிரசாதமாக வழங்கப்படும் இந்த புற்று மண், ‘நோய் தீர்க்கும் அமிர்தம்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நினைத்ததை நிறைவேற்றும் தேங்காய் வழிபாடு
கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடது புறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது, ‘திருப்பதியில் ஒருநாள் எனும் உற்ஸவம்’ நடைபெறுகின்றது. அன்று ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கும் நடக்கின்றது.
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற பெருமாளை தரிசித்து விட்டு கோயிலில் தரப்படும் மட்டை உரிக்காத தேங்காயை எடுத்துச் சென்று வீட்டின் பூஜை அறையில் வைத்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. நம் வேண்டுதல் நிறைவேறிய உடன் திருவோண தினத்தன்று தேங்காயை பெருமாளுக்கு காலை 10.30 மணிக்கு மேல் உரித்து வைத்து வணங்க வேண்டும். நாம் தேங்காயை எடுத்துச் சென்று ஐந்து மாதங்கள் ஆகியும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்றாலும், தேங்காயை உரித்து வைத்து விட்டு, வேறொரு தேங்காயை எடுத்துச் சென்று பூஜிக்கலாம். மனம் உருகி பெருமாளை வணங்கி வந்தால், நினைத்த காரியம் விரைவில் நடக்கும் என்பது பலரது நம்பிக்கை.
இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மூலவரான ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளை வணங்கிய பின்பு சந்நிதியின் உட்புறத்தில் உள்ள தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய சந்நிதியில் குடிகொண்டுள்ள ஸ்ரீநவநீதகிருஷ்ணர், ஸ்ரீருக்மணி ஸ்ரீசத்யபாமா ஆகியோருடன் சேர்ந்து தம்பதி சமேதராக அருள்புரிகிறார். குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தை பாக்கியம் கொடுத்து குடும்பத்தைத் தழைக்கச் செய்கிறார். வீடுகளில் பசுக்களை வைத்து பராமரிப்பவர்கள் இவரை வணங்கினால், பசுக்களைக் காப்பார் எனவும் பசுக்கள் அதிகம் பால் தரும் எனவும் உறுதியாக நம்புகின்றனர். திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி நவநீதகிருஷ்ணரை மனம் உருக வணங்கிச் செல்கின்றனர். அத்தகையோருக்கு உடனே அவர் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.
சிறப்பு வழிபாடுகள்
ஞாயிற்றுக்கிழமைதோறும் உடல் உபாதை சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. திங்கட்கிழமை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மன அமைதி எற்படுவதற்கான வழிபாடு நடைபெறுகிறது. செவ்வாய்க் கிழமை தொழில், குடும்பம், வியாபாரம் மேன்மையடையவும், கடன் பிரச்னைகள் தீருவதற்கும் வழிபாடு செய்யப்படுகிறது.
புதன்கிழமை குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் விருத்தி வேண்டி வழிபாடு நடைபெறுகிறது. வியாழக்கிழமை திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை வரம் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறவும், திருமணத் தடையுள்ளவர்களுக்கு தடை நீங்கவும் வழிபாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமை அனைத்து விதமான சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
மேலும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மார்ச் மாதம் நடைபெறும் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க பிப்ரவரியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. பெற்றோருடன் மாணவர்களும் இந்த சிறப்பு வழிபாட்டில் பெரும் அளவில் கலந்து கொள்கின்றனர்.
கோயிலில் எப்போதும் முழு அமைதி நிலவுவதால், பக்தர்கள் நின்று நிதானமாக மூலவரை தரிசித்து, தியானம் செய்த பின்பு வீட்டுக்குத் திரும்புகின்றனர்.
இத்திருக்கோயிலின் மூலவராக எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாளை வணங்குவதால் திருமண தடை நீங்கும், வியாபாரம் செழிக்கும், விவசாயம் மேன்மை அடையும், குழந்தைகளின் கல்வி மேலோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தத் தலத்தில் சிவனுக்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததாகக் கூறப் படுகிறது. வில்வ மரம் தல விருட்சமாக விளங்குகிறது. கோயிலின் வெளிப்புறத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய நட்சத்திரத்துக்கு ஏற்ற மரங்கள் உள்ளன. அவரவர் நட்சத்திர தினத்தில், மரங்களுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வரம் பெற்று வரலாம்.