புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
இந்தியாவின் முதல் புல்லண்ட் ரயில் குறித்த ஒப்பந்தம் ஒன்று நேற்று இந்திய-ஜப்பான் பிரதமர்களிடையே கையெழுத்தான நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாரஷ்டிர மாநிலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டம் பாய்ஸர் என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில், பாய்ஸர் ரயில் நிலையத்துக்கு வெளியே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டு புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
‘‘புல்லட் ரயில் திட்டத்துக்காக எங்கள் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தினால் நாங்கள் அழிந்துவிடுவோம். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது’’ என்று தெரிவித்தனர். பல்கர் மாவட்ட போலீஸ் டிஎஸ்பி மஞ்சுநாத் சிங்கே கூறுகையில், ‘‘போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை’’ என்றார். போராட்டம் அமைதியாக நடந்ததாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நர்நவ்ரே தெரிவித்துள்ளார்.