பூப்படைதல்: மகளுக்கு தாய் சொல்லிக்கொடுக்க வேண்டியவை

பூப்படைதல்: மகளுக்கு தாய் சொல்லிக்கொடுக்க வேண்டியவை

மாதவிலக்கு பற்றி மகள் எழுப்பப்படும் கேள்விகளும், தாய்மார்கள் அதற்கு அளிக்கவேண்டிய பதில்களும் விரிவாக இங்கே தரப்படுகின்றன.

பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களின் மனதில், அந்த குழந்தைகள் வளரும்போது சில கேள்விகளும் வளருகின்றன. அவற்றில், ‘மகள் வயதுக்கு வரும்போது, முதல் மாத விலக்கை எதிர்கொள்ள அவளை எப்படி தயார்ப்படுத்துவது?’ என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.

பெண் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான தருணம், அவள் பூப்படைந்து பெண்ணாக மாறுவது. இயற்கையாக அவர் களது உடலில் ஏற்படும் அந்த முக்கிய திருப்பம், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும். மனக்கலக்கத்தை கொடுத்துவிடக்கூடாது.

அவர்கள் கலக்கமடையாமல் இயல்பாக இருக்கவும், முதல் மாதவிலக்கை தயக்கமின்றி எதிர்கொள்ளவும், தாய்மார்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மகளுக்கு அதை சொல்லிக்கொடுப்பது தாயாருக்கு எளிதான காரியம்தான். அது எப்படி என்பதை இங்கே விளக்குகிறேன்.

உங்கள் மகளுக்கு எட்டு வயதாகிவிட்டால் பூப்படைதல் பற்றி அவளிடம் பேசத் தொடங்கிவிடுங்கள். ‘கடந்த தலைமுறையான நாங்களெல்லாம் 15, 16 வயதில் வயதுக்கு வந்தோம். இப்போது சிறுமிகள் 10 முதல் 15 வயதுக்குள் மாதவிலக்காகும் பருவத்தை எட்டிவிடுகிறார்கள். இப்போது உனக்கு எட்டு வயதாகியிருக்கிறது.

இனி உனது உடல் வளர்ச்சியில் சில மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் வளரத் தொடங்கும். அக்குள் மற்றும் சில பகுதிகளில் ரோமம் வளரும். இயற்கையான அந்த மாற்றங்கள் உன் உடலில் ஏற்படத்தொடங்கிவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நீ பூப்படைந்துவிடுவாய்’ என்று சொல்லவேண்டும்.

எட்டு வயது சிறுமி, மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் பாடத்தை விளக்குவதுபோன்று இந்த தகவல்களை சொல்லாமல் தோழி போன்று நட்புடன் பக்குவமாக சொல்லிக்கொடுக்கவேண்டும்.

ரத்தம் என்பது சிறுமிகளை பயப்படுத்தும் விஷயம். அதனால் ‘முதல் மாதவிலக்கில் ரத்தம் சிறிதளவு வெளிப்படும். அதை நினைத்து பயம்கொள்ள வேண்டாம்,’ என்று கூறவேண்டும். இப்போது பெரும்பாலான மாணவிகள் இரு பாலர்கள் பயிலும் பள்ளிகளில்தான் படித்துக்கொண்டிருக் கிறார்கள். பத்து வயதுக்கு மேல் வகுப்பில் வைத்து குறிப்பிடத்தக்க விதத்தில் அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அது பூப்படைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த அறிகுறி தென்பட்டதும் எந்த தயக்கமுமின்றி பாடம் நடத்தும் ஆசிரியரிடமோ, ஆசிரியையிடமோ அதை தெரிவிக்கவேண்டும். இது இயற்கையானது என்பதால் பதற்றமின்றி ஆசிரியையை அணுக ஊக்குவியுங்கள்.

மகளிடம் பூப்படைதல் பற்றி பேசி, அவளது சந்தேகங்களுக்கு தாய் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், தாய்-மகள் இடையே நெருக்கமான உறவு தோன்றும். அப்போது அவள் தாயிடம் தனது உடல் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி பேசத்தொடங்கிவிடுவாள். அப்படிப்பட்ட தருணத்தில் அவளது பூப்படையும் காலகட்டத்தை தாயாரால் ஓரளவு கணிக்க முடியும். அப்போதிருந்து மகளின் புத்தகப்பைக்குள் ஒரு ‘சானிட்டரி பேடை’ வைத்து அனுப்பவேண்டும். அதன் மூலம் அவளிடம் வயதுக்கு வருதலுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடலாம். உடனே ‘பேடு’ பயன்படுத்தினால் உடையில் கறைபடுவதை தவிர்த்திடவும் முடியும்.

மாதவிலக்கு பற்றி மகளிடம் பேசத் தொடங்கிவிட்டாலே அவளுக்கு நிறைய சந்தேகங்கள் வரும். பொதுவாக அவர்களால் எழுப்பப்படும் கேள்விகளும், தாய்மார்கள் அதற்கு அளிக்கவேண்டிய பதில்களும் இங்கே தரப்படுகின்றன.

மகள்: சில சிறுமிகள் எட்டு வயதிலே வயதுக்கு வந்துவிடுவார் களாமே அப்படியா?

தாய்: ஆமாம். ஆனால் எட்டு வயதுக்கு முன்பு வயதுக்கு வந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் 16 வயதுவரை வயதுக்கு வராவிட்டாலும் டாக்டரின் ஆலோசனை அவசியம்.

மகள்: மாதவிலக்கு என்பது என்ன?

தாய்: பெண் பருவ வளர்ச்சியின் மிக முக்கிய கட்டத்தை அடைந்து விட்டாள் என்பதை உணர்த்துவது மாதவிலக்கு. அப்போது சினைமுட்டை முதிரும் தன்மை பெறும். கருப்பையும் வளர்ந்து கர்ப்பமடைவதற்கான தகுதியை பெற்றிடும். பெண்களின் கருப்பையின் உள்ளே என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற பகுதி உண்டு. ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் அது தடித்து வளர்ந்து, கர்ப்பத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகும். கர்ப்பம் அப்போது உருவாகாததால், என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலை இருக்காது. அதனால் அது மாதத்திற்கு ஒருமுறை இளகி, ரத்தத்தோடு உருகி வெளியேறும். இதைதான் நாம் மாத விலக்கு என்று சொல்கிறோம்.

மகள்: மாதவிலக்கு உதிரப்போக்கு எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்?

தாய்: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் என்டோமெட்ரியத்தின் தன்மையைப் பொறுத்து உதிரப்போக்கின் கால அளவு இருக்கும். கெட்டியான என்டோமெட்ரியத்தை கொண்டவர்களுக்கு உதிரப்போக்கு நீளும். பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இது வெளிப்படும். அரிதாக ஒருவாரம் வரைகூட நீளலாம். அதற்கு மேலும் தொடர்ந்தால் டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

மகள்: மாதவிலக்கில் சராசரியாக எவ்வளவு ரத்தம் வெளியேறும்? அதிக உதிரப்போக்கு என்றால் என்ன?

தாய்: ஒரு தடவை மாதவிலக்கு ஏற்படும்போது 30 முதல் 60 மி.லி. உதிரம் வெளியேறும். சிலருக்கு இதன் அளவு 80 மி.லி. வரை இருக்கும். அதற்கு மேல் வெளியேறினால் அது அதிக ரத்தப்போக்காக கருதப்படும். அப்போது கூடுதலாக பேடு மாற்றவேண்டியதிருக்கும். உத்தேசமாக ஒரு நாள் 5 பேடுக்கு மேல் மாற்ற வேண்டியது இருந்தால், அதிக உதிரப்போக்கு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மகள்: ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சரியாக வந்து விடுமா?

தாய்: முதன் முதலில் வரும் மாதவிலக்குக்கு பிறகு பலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துதான் அடுத்த மாதவிலக்கு வரும் நிலை ஏற்படலாம். சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் முறையாக மாதந்தோறும் வருவதில்லை. அதன் பின்பே சரியாக வரத்தொடங்கும்.

மகள்: மாதவிலக்கு நாட்களில் எவ்வாறு சுத்தத்தை கடைப் பிடிக்கவேண்டும்?

தாய்: அதிக ஈரம்படாவிட்டாலும் அந்த நாட்களில் நான்கு மணி நேரத்திற்கு ஒரு பேடு மாற்றிவிட வேண்டும். ஒரே பேடை அதிக நேரம் வைத்திருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு முறை அதை மாற்றும்போதும் பேடு வைத்திருந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இளம் சுடுநீரே போதுமானது. அதை ஊற்றி கழுவித் துடைத்துவிட்டு அடுத்த பேடு வைக்கவேண்டும். அதிக ஈரப்பதம் இருக்கும் என்று கருதி இரண்டு பேடுகளை ஒன்றாகவைக்கக்கூடாது. பேடு மாற்றியதும் கையை சோப்பிட்டு கழுவிவிட வேண்டும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். அது சுத்தத்தோடு, உடல் வலியையும் போக்கி இதமளிக்கும்.

மகள்: மாதவிலக்கு நாட்களில் எந்த மாதிரியான மன-உடல் அவஸ்தைகள் தோன்றும்?

தாய்: இப்போது சிறுமிகள் சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடுவதில்லை. உடல் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. படிப்பு தொடர்புடைய மன அழுத்தமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு பல்வேறுவிதமான உடல் ரீதியான அவஸ்தைகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது வயிற்றுவலி. இதனை டிஸ்மெனோரியா என்கிறார் கள். வயதுக்கு வந்து ஒரு வருடம் கழித்து மாதவிலக்கு சுழற்சி சரியான பின்பு இந்த வகை வயிற்று வலி தோன்றும். அதோடு முதுகுவலி, தலைவலி, தலைசுற்றுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கை கால் குடைச்சல் போன்றவைகளும் ஏற்படும். ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரி மென்ஸ்சுரல் சிண்ட்ரோம் எனப்படும் தாக்கங்கள் தோன்றும். அப்போது உறக்கமின்மை, அதிக பசி, தலைவலி, சோர்வு, மார்பகங்களில் வலி போன்றவை தோன்றலாம்.

மகள்: பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பூப்படையும் முதல் மாதவிலக்கை எதிர்கொள்ள என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்யலாம்?

தாய்: பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ‘பீரியட் கிட்’ ஒன்றை தங்கள் புத்தகபையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிலக்கு எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள அது உதவும். அந்த கிட்டில் இரண்டு பேடுகள், சிறிய டவல், டிஸ்யூ, சிறிய சோப், ஆன்டி செப்டிக் ஆயில் போன்றவைகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

இத்தனை விஷயங்களை தாய், மகளுக்கு கற்றுக்கொடுத்தாலும், முக்கியமான இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தரவேண்டும். உடலுறவு பற்றியும் கர்ப்பம் பற்றியும் பக்குவமாக புரியும் விதத்தில் எடுத்துரைக்கவேண்டும். பாலியல் வன்முறைகளும், பாலியல்ரீதியான தவறுகளும் எப்படி நடக்கின்றன என்பதையும் புரியவைத்து, ஆண்-பெண் நட்பின் எல்லை களையும் வரையறுக்க வேண்டும்.

வயதுக்கு வருதல் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம். அப்போது அவர்களை சரியாக வழிநடத்தவேண்டியது தாய்மார்களின் பொறுப்பு.

Thanks to Maalaimalar.com

Leave a Reply