பூர்வஜன்ம பாவம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!
உலகத்தில் பிறந்த மனிதர்களுக்கு, ‘தான்’ என்ற அகந்தை இருப்பது தவறு. அப்படி இருக்க, மனிதர்களைப் படைக்கும் பிரம்மதேவருக்கு அகந்தை இருப்பது பெரும் தவறு அல்லவா?
அப்படி ஒரு தவற்றை பிரம்மதேவர் செய்ய, அதன் விளைவு… நாளும் நாம் வழிபட ஓர் அற்புத ஆலயம் ஏற்பட்டது! அந்த ஆலயம்தான் நாமக்கல் மாவட்டம், கொக்கராயன் பேட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்.
திரேதாயுகத்தில் நிகழ்ந்த கதை இது.
படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனுக்கு ‘தான் இல்லாவிட்டால் இந்த பூவுலகில் உயிர்கள் தோன்ற முடியாது’ என்ற கர்வம் ஏற்பட்டது. அவரது கர்வத்தை அடக்கத் திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
கர்வத்தின் காரணமாக பிரம்மதேவர் தன்னை மறந்த நிலையில் இருந்தபோது, அவருக்கு மறதிநோயை உண்டாக்கினார் ஈசன். உறங்கி எழுந்ததும் படைப்புத் தொழில் செய்வதற்கு உண்டான யுக்திகள் நினைவில் இல்லாமல் திணறினார் பிரம்மன். அதன் பிறகு, தன் தவற்றை உணர்ந்தார். அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதரிடம் விமோசனம் வேண்டினார் பிரம்மதேவன்.
‘‘பூலோகத்தில் காவிரிக்கரையில் மாமரங்கள் அடர்ந்த ஓரிடத்தில், சிவ வழிபாடும் தவமும் செய்தால், விமோசனம் கிடைக்கும்’’ என்று அருளினார் நாரதர்.
அதன்படி பூலோகம் வந்த பிரம்மதேவன், காவிரிக்கரையில் மாமரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்தத் தலத்தை அடைந்து, சிவ வழிபாடும் தவமும் செய்து, சிவனாரின் திருவருளால் விமோசனம் பெற்றதாகச் சொல்கிறது தலபுராணம்.
சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்ம தேவர் வழிபட்டதால், இறைவன் ஸ்ரீபிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரைத் தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பிகையின் திருநாமம் ஸ்ரீசௌந்தர நாயகி. சிறந்த வரப்பிரசாதியான இந்த அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத் தியம் செய்து, 21 சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை வழங்கி ஆசி பெற்றால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தத் தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், இந்தக் கோயிலுக் குத் திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பாவங்கள் போக்கும் பைரவர்
இந்தத் தலத்தில், நாய் வாகனம் இல்லா மலும் எட்டுத் திருக்கரங்களுடனும் பைரவ மூர்த்தி அருள்பாலிப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள் பக்தர்கள்.
மாதம்தோறும் வரும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று, இ்க்கோயிலுக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கும்; விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது நம்பிக்கை. அப்படி திருமணம் கைகூடியதும், இங்கு வந்து பைரவருக்கு வடைமாலை சமர்ப்பித்து வழிபடுகிறார்கள், பக்தர்கள்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு பைரவரை வணங்கினால், பித்ரு சாபமும் பிரேத சாபமும் நிவர்த்தி ஆகும். மேலும், பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும், நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும் என்பது ஐதீகம்.
கற்கதவுகள் திறந்தால் கலியுகம் முடியும்!
திருக்கோயிலின் பிராகாரத்தில் அமைந் துள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மதேவர் ஆகியோரைத் தரிசிப்பதுடன், கற்கதவுகளையும் தரிசிக்கலாம். இந்தக் கற்கதவுகள் திறக்கும்போது, கலியுகம் முடிந்து மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
மஹா சிவராத்திரி வழிபாடு இங்கே சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தப் புண்ணிய தினத்தில் நாமும் நாமக்கல் அருகில் உள்ள இந்தத் தலத்துக்குச் சென்று பிரம்ம லிங்கேஸ்வரரை வழிபட்டு வரம்பெற்று வருவோமே!