ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக பாதியில் நின்றுவிட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டு கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டகாரர் கிறிஸ்ட் கெய்ல் முதல் ஓவரிலேயே 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரை அடுத்து கேப்டன் விராத் கோஹ்லியும் ஒரே ரன்னில் அவுட் ஆனதால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் டிவில்லியர்ஸ் 57 ரன்களும், எஸ்.என்.கான் 45 ரன்களும் அதிரடியாக எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்ட்டுக்கள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி களமிறங்க தயாரான நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.