பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய 85% இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலை நிர்ணயித்து வந்தன. ஆனால், கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து வந்த போதிலும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 91.51 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்கள் மௌனம் காப்பது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.18-யும், டீசலுக்கு ரூ.25-யும் இழப்பு ஏற்பட்டதாகவும், தற்போதைய விலை நிலவரத்தால் பெட்ரோல் விற்பனையில் லாபம் கிடைப்பதாகவும், டீசல் விற்பனையில் இழப்பீடு லிட்டருக்கு ரூ.5 ஆகா குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை பெட்ரோல் விற்பனை சரிக்கட்டுவதாககவும், அதனால் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் 116.01 ஆக இருந்த கச்சா எண்ணெய் விலை, நேற்றைய நிலவரப்படி 91.45 ரூபாயாக வீழ்ச்சியடைந்த நிலையில் அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு உதவுவதற்காகவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிட்டுள்ளனர்.