பெண்களின் அழகை அதிகரிக்கும் ‘பெல்ட்’ உடைகள்
பழமையில் புதுமையை பிரதிபலிக்கும் பெண்களின் ஆடை ரகங்களுக்கு மவுசு கூடி வருகிறது. அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது, பெல்ட் ஆடை ரகங்கள்.
பெண்களின் ரசனைக்கேற்ப பேஷன் உலகை புதுமையான டிசைன்கள் அலங்கரிக்கின்றன. பழமையில் புதுமையை பிரதிபலிக்கும் ஆடை ரகங்களுக்கும் மவுசு கூடி வருகிறது. அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது, பெல்ட் ஆடை ரகங்கள்.
இடுப்பில் ஒட்டியாணம் அணிவது பழைய பேஷனாக பார்க்கப்பட்டு வந்தது. அந்த இடத்தை இப்போது பெல்ட்டுகள் ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது. ஒட்டியாணம் போலவே பெல்ட்களும் அழகிய அலங்காரங்களில் ஒளிருகின்றன. அவை புது அவதாரம் எடுத்து ஆடைக்கு எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றன.
அதனால் வளையல்கள், கம்மல்கள், கொலுசுகள் வரிசையில் பெல்ட் உடைகளும் அழகு சேர்க்கும் பொருட் களின் பட்டியலில் இடம்பிடித்து விட்டது. அதிலும் நவநாகரிக உடைகளை அணிய விரும்பும் பெண்களுக்கு ஏற்ப பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பெல்ட்டுகள் தயாராகின்றன. பல்வேறு மெட்டீரியல்களிலும் வடிவமைக்கப்படுகின்றன.
ஒரே உடைக்கு வெவ்வேறு பெல்ட்டுகளை அணிந்து வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கவும் முடியும். ‘சாதாரண உடையாக இருந்தாலும் அணியும் பெல்ட் அந்த உடையின் மதிப்பை அதிகப்படுத்திவிடும், தோற்றத்திற்கும் புது பொலிவை ஏற்படுத்திக் கொடுக்கும்’ என்கிறார்கள் பேஷன் டிசைனர்கள்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு ஒட்டியாணம் அணிவது தொன்று தொட்டுவரும் பழக்கமாக இருந்து வருகிறது. அதனை அணியும்போது சேலையின் முந்தியும், மடிப்புகளும் நேர்த்தியாக அமைந்துவிடும். அவை உடல் அமைப்புக்கு பொருத்தமாக இருக்கும். இடுப்புக்கும் அழகு சேர்க்கும். இடுப்பு பெருத்துப்போனால் அதை அணிய முடியாது என்பதால் பெண்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஒட்டியாணம் உதவியது.
அதுபோலவே பெல்ட்டுகளும் இடுப்புக்கும், உடுத்தும் உடைக்கும் சவுகரியமாக அமைந்திருக்கின்றன. கீழே குனிந்தாலோ, நிமிர்ந்தாலோ ஆடைகள் தளர்ந்துவிடும். சில சமயங்களில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடும். அந்த குறையை பெல்ட்டுகள் நிவர்த்தி செய்துவிடும்.
அதற்கேற்பவே பெண்களை கவரும் அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இப்போது புடவையுடன் சேர்த்தே அணியும் வகையிலும் பெல்ட் ஆடைகள் உலா வருகின்றன. பாலிவுட் நடிகைகள் விரும்பி உடுத்தும் பெல்ட் ரக ஆடைகள் இப்போது இளம் பெண்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.