பெண்களுக்கு லாபம் தரும் புதிய தொழில்கள் கிரிஸ்டல் நகை தயாரிப்பு ஒன்று

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் கிரிஸ்டல் நகைகளை விரும்பி அணிகிறார்கள். பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிப்பதால் இது அனைவரையும் கவர்கிறது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பாகும். பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.

கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளைபோல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம், நடுத்தர நீளம், அதிக நீளம் ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட்டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டிக்கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும்.

அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வரவேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சுபோட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டர் நகை ரெடியாகி விடும்.

சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். இந்த கிரிஸ்டல் நகை குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள்.

தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல் கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர்வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகிறார்கள். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன்மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும்.

ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன்மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500 கிடைக்கும். ஒருநாள் தயாரித்ததை விற்றபின் அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். விற்பனை அளவுக்கேற்ப உற்பத்தியை அதிகரித்தால் வருவாய் கூடும்.